×

புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தையொட்டி நடிகை சன்னி லியோன் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு பொதுநல அமைப்பினர் எதிர்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தையொட்டி அரசு மற்றும், தனியார் நிறுவனங்களின் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நான்கு இடங்களில் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கமர் பிலிம் பேக்டரி சார்பில் தேசிய அளவில் புகழ்பெற்ற இசைக்குழுவினர் மற்றும்  நடன குழுவினர் பங்கேற்க்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரபல ஹாலிவுட் நடிகை சன்னி லியோனின் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கான ரூபாயில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன.

இதற்கு தமிழர் களம் உள்ளிட்ட பல்வேறு பொதுநல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழர் களம் அமைப்பின் தலைவர் அழகர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடற்கரை சாலையில் ஒன்று திரண்டு, கலை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கை இழுத்து மூடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களை போலீஸார் தடுப்பு கட்டை போட்டு தடுத்தனர் ஆனால் தடுப்புக் கட்டையை தூக்கி எறிந்து கலை நிகழ்ச்சி நடைபெறும் கூட்ட அரங்கை நோக்கி போராட்டக்காரர்கள் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து போராட்டகாரர்கள் கூட்ட அரங்கிற்குள் சென்று நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் அமர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து போலீசார் அவர்களை தடுக்கும் போது இரு தரப்புக்கும் இடையே  தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே, ஆத்திரமடைந்த பொதுநல அமைப்பினர் நிகழ்ச்சிக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த சன்னி லியோன் பேனரைக் கிழித்தனர். இதனை தொடர்ந்து உடனடியாக அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். பொதுநல அமைப்புகளின் முற்றுகை காரணமாக பழைய துறைமுகப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே தற்போது உயர் நீதிமன்ற உத்தரவில், புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பிரபலமானவர்கள், திரை பிரபலங்கள் பங்கேற்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நடிகை சன்னி லியோன் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்தவர்கள் விழா ஏற்பாட்டாளர்களிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags : Sunny Lyon ,New Year's ,Puducherry , Pondicherry, New Year Celebration, Sunny Leone, Concert
× RELATED மராட்டியம்: மராத்தியர்களின் புத்தாண்டான குடி பத்வா கோலாகல கொண்டாட்டம்