காஞ்சி, விழுப்புரம் மீன்பிடி துறைமுகத்திற்கான டெண்டர் வௌியிட்டதில் விதிமீறல் இல்லை; உயர்நீதிமன்றத்தில் அரசு பதில் மனு தாக்கல்

சென்னை: காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்காக கடந்தாண்டு டெண்டர் வெளியிடப்பட்டதில் விதிமீறல் ஏதும் இல்லை என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக மீன்வளத்துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம் அழகன்குப்பம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் ஆலம்பரைக்குப்பம் ஆகிய கழிவேலி நீர்பிடிப்பு பகுதிகளில் புதிதாக மீன்பிடி துறைமுகம் அமைக்க கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 235 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டது.

இந்நிலையில், சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரான என்.மணிவண்ணன் என்பவர்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ‘துறைமுக கட்டுமான பணிக்காக விதிகளை மீறி  திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளுக்கு தேவையான ஜல்லி கற்கள், கான்கிரீட் கலவை ஆகியவற்றை வாங்கும்போது ஈரோட்டை சேர்ந்த நிறுவனம் பலனடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு 22 கோடியே 46 லட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும்.

எனவே, முந்தைய அதிமுக ஆட்சிகாலத்தில் வெளியிட்ட டெண்டரை ரத்து செய்து, விதிகளுக்கு உட்பட்டு புதிய டெண்டர் அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார். இந்த வழக்கில் தமிழக மீன்வளத்துறை தலைமைப் பொறியாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘இந்த வழக்கின் மனுதாரர் தனக்கு டெண்டர் கிடைக்கவில்லை என்பதால் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட டெண்டரை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். விதிகளுக்கு உட்பட்டு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் கையெழுத்தாகி ஆரம்ப கட்ட பணிகளும் நடந்து வருவதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: