×

போதை பொருள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கண்டறிய சென்னை விமான நிலைய சுங்க துறையில் மோப்ப நாய் பிரிவு தொடக்கம்

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை கமிஷனர் அலுவலகம் இயங்கி வருகிறது. விமான நிலைய சரக்கக பிரிவுக்கும் தனி கமிஷனர் அலுவலகம் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், சுங்க வரி செலுத்தி தங்கம், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பொருட்களை எடுத்து வருகிறார்களா? சுங்கத்துறை விதிகளுக்குட்பட்டு நடக்கிறார்களா? என்பதை கண்காணிப்பர். மேலும், சட்ட விரோதமாக கடத்தி வரும் பொருட்களை பறிமுதல் செய்து, அவற்றுக்கான சுங்க வரி, அபராதம் வசூலித்தல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளையும், சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், போதை பொருட்களை கண்டறியும் பணியில் ஈடுபட, சுங்கத்துறையில், மோப்ப நாய் பிரிவு புதிதாக துவங்கப்பட்டுள்ளது. இந்த மோப்ப நாய் பிரிவை, தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல ஜி.எஸ்.டி., தலைமை கமிஷனர் எம்.வி.எஸ்., சவுத்ரி துவங்கி வைத்தார். முதல் கட்டமாக, ஓரியோ, ஆர்லி என இரு நாய்கள் அடங்கிய பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் செயல்பாடுகளை பொறுத்து, அடுத்த கட்டமாக கூடுதல் நாய்கள் சேர்க்கப்பட உள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நாய்கள் பயிற்சி மையத்தில் இருந்து இந்த மோப்ப நாய்கள், சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. தற்போது ஒரு வயதாகிறது.

2 மாதக்குட்டிகளாக இருக்கும்போது பயிற்சி தொடங்கி 10 மாதங்கள் முடிந்து சென்னை விமான நிலைய பணிக்கு வந்துள்ளன. விமான நிலையம் மற்றும் சரக்கக பகுதிகளில், இந்த நாய்கள் தினமும் சுற்றி வரும். இதுகுறித்து தலைமை கமிஷனர் சவுத்ரி கூறுகையில், ‘குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் போலீஸ் துறையில் நாய்கள் 100 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடத்தலை தடுக்கவும், மனிதர்களை பாதுகாக்கவும் இவற்றின் பங்கு முக்கியமானது. 1984ல் சுங்கத்துறையில் போதை பொருள் கடத்தலை தடுக்க நாய்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது சுங்கத்துறையில் மோப்ப நாய்கள் இணைந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. மேலும், விமானத்தில் கடத்தி வரப்படும் போதை பொருட்களை கண்டுபிடிப்பதில், மோப்ப நாய்களின் பங்கு மிக முக்கியமானதானது. இதன் வாயிலாக சுங்கத்துறையின் நுண்ணறிவு பிரிவு சிறந்ததாக மாற உள்ளது’ என்றார்.


Tags : Mobba Dog Division ,Chennai , Launch of sniffer dog unit at Chennai Airport Customs to detect prohibited items including narcotics
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!