சுனாமி நினைவு தினத்தையொட்டி 6,857 சதுர அடியில் சுனாமியின் சுவடுகளை தத்ரூபமாக வரைந்து பொறியியல் மாணவர் அசத்தல்

நாகை: சுனாமி நினைவு தினத்தையொட்டி, 6,857 சதுரஅடியில் சுனாமியின் சுவடுகளை தத்ரூபமாக வரைந்து நாகையை சேர்ந்த பொறியியல் மாணவர் அசத்தியுள்ளார்.நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (30). பிஇ படித்து முடித்து இவர், ஐஏஎஸ் முதல்நிலை போட்டி தேர்விற்காக படித்து வருகிறார். இந்நிலையில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, நாகையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 2004ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது மக்கள் அடைந்த துன்பங்கள், துயரங்கள், உயிர் மற்றும் உடமைகள் இழப்பு, சுனாமி காலத்தில் நடந்த மீட்பு நடவடிக்கை ஆகியவற்றை 6,857 சதுர அடியில் தனிமனிதனாக 10 மணி நேரம் 17 நிமிடத்தில் மார்க்கர் பேனா மூலம் தத்ரூபமாக வரைந்து கல்லூரி மாணவர் கார்த்திக்ராஜா அசத்தியுள்ளார்.

இதுகுறித்து மாணவர் கூறியதாவது: சிறு வயதில் இருந்து ஓவியம் வரைய வேண்டும் என்ற ஆசை இருந்தது. இத்தாலி நாட்டில் 6ஆயிரத்து 118 சதுர அடி நீளத்திற்கு தனி நபர் ஓவியத்தை 5 நாட்கள் வரைந்து கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதே போல் கின்னஸ் சாதனை பெற வேண்டும் என்பதற்காக சுனாமி நினைவு நாளில் சுனாமியின் சுவடுகளை வெளிகொண்டு வர முடிவு செய்தேன். இதற்காக நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் உள்ள கலையரங்கத்தில் ஓவியம் வரைய ஆசைப்பட்டேன். கலெக்டர் அருண்தம்புராஜ் உதவி மூலம் இந்த ஓவியத்தை வரைய தொடங்கினேன். சிவகாசியில் இருந்து சற்று கடினதன்மை கொண்ட சார்ட் பேப்பரை வரவழைத்து அதை தரையில் ஒட்டி மார்க்கர் பேனா மூலம் தத்ரூபமாக வரைந்து முடித்துள்ளேன். இந்த ஓவியம் முழுக்க முழுக்க சுனாமியின் சுவடுகளை வெளிகாட்டும் வகையில் வரைந்துள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: