பேரவை தேர்தலை ஒத்திவைக்க கூடாது: தேர்தல் ஆணையத்திடம் உபி கட்சிகள் வலியுறுத்தல்

லக்னோ: ‘உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலை ஒத்திவைக்கக் கூடாது,’ என்று இம்மாநிலத்தை சேர்ந்த முக்கிய கட்சிகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளன. உத்தர பிரதேசம் உட்பட 5 மாநிலங்களில், அடுத்தாண்டு பிப்ரவரி- மார்ச்சில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால், உத்தர பிரதேசத்தில் தேர்தலை ஒத்திவைக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு இம்மாநில உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியது. இந்நிலையில், தேர்தல் தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுப்பதற்காக, தலைமை தேர்தல் ஆணயைர் சுசில் சுந்திரா, தேர்தல் ஆணையர்கள் ராஜிவ் குமார், அனுப் சந்திர பாண்டே ஆகியோர் 3 நாள் பயணமாக உத்தர பிரதேசம் சென்றனர். நேற்று முன்தினம் இவர்கள், இம்மாநிலத்தை சேர்ந்த அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

இதில், பாஜ, காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்டிரிய லோக்தளம் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்றன. கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகள் அனைத்துமே, ‘கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி, திட்டமிட்டப்படி தேர்தலை நடத்த வேண்டும். அதை ஒத்திவைக்கக் கூடாது,’ என்று வலியுறுத்தின.

*புர்கா அணிந்த பெண்கள் வாக்களிக்க பாஜ நிபந்தனை

ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பாஜ ‘வாக்குச்சாவடிக்கு புர்கா அணிந்து வரும் பெண்கள் அனைவரையும், முறையாக சரிபார்த்த பிறகே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அவர்கள் உண்மையான வாக்காளர்கள் தானா என்பதை சரிபார்க்க, வாக்குச்சாவடிகளில் பெண் போலீசாரை நிறுத்த வேண்டும்’ என்று கூறியது.

Related Stories: