×

2026 பேரவை தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாமக தலைமையில் தனி அணி அமைக்க வேண்டும்: சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் 2021ம் ஆண்டு விடை கொடுப்போம்,  2022ம் ஆண்டை வரவேற்போம் என்ற தலைப்பில் சென்னை ேசப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில் நேற்று காலை நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணி, பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அவை:
கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிக, மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னிய சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கான சமூக நீதியை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம்.

அப்படி ஒரு முடிவை எடுத்ததில் எந்தத் தவறும் இருப்பதாக பாமக கருதவில்லை. 2026 சட்டப்பேரவை தேர்தலில் நமது நோக்கத்தை வென்றெடுப்பதற்கான அரசியல் பயணத்தை நாம் தொடங்கியாக வேண்டும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது சற்று கடினமான இலக்கு தான் ஆனால் சாத்தியமாகாத இலக்கு அல்ல. கடுமையாக உழைத்தால் அந்த இலக்கை நம்மால் நிச்சயமாக எட்ட முடியும். தமிழ்நாட்டின் நலனையும், தமிழ்நாட்டு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு தான் பாமக நிறுவனர் ராமதாஸ் எந்த முடிவையும் எடுப்பார். அதற்காக பாமக தலைமையில் தொலைநோக்கு பார்வை கொண்ட அரசை அமைக்க வேண்டும் என்பதற்காகத் தான் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில்  பாமக தலைமையில் தனி அணி அமைக்க வேண்டும்.  

மக்களை மீண்டும், மீண்டும் சந்தித்து அவர்களின் ஆதரவை வென்றெடுப்பது, பாமகவை அனைத்து கிராமங்களிலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள பாமக பொதுக்குழு உறுதியேற்றுக் கொள்கிறது. வன்னியர்களின் இடஒதுக்கீட்டை நியாயப்படுத்துவதற்கான சட்ட காரணங்கள் அதிக அளவில் உள்ளன. உச்ச நீதிமன்றத்தில் அவற்றை முன்வைத்து, வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை மீட்டெடுக்க முடியும் என்று  உறுதியாக நம்புகிறது.  தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்பு தமிழ்நாட்டவருக்கே வழங்கப்பட வேண்டும்.

இதற்கான சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். 2022ம் ஆண்டு பாமகவை வலுப்படுத்துவதற்கான திண்ணைப் பிரச்சார ஆண்டாக கடைபிடிக்கப்படும். 2022ம் ஆண்டை பாமகவை வலுப்படுத்துவதற்கான திண்ணைப் பிரச்சார ஆண்டாக கடைபிடிக்க இந்தப் பொதுக்குழு உறுதி ஏற்கிறது. 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் மிக அதிக அளவில் வெற்றிகளை குவிக்க கடுமையாக உழைக்கவும் பாமக பொதுக்குழு உறுதியேற்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tags : Pamaka ,Tamil Nadu ,2026 Assembly elections ,Special General Committee , To form a separate team led by Pamaka to take power in Tamil Nadu in the 2026 Assembly elections: Resolution passed in the Special General Committee
× RELATED அரசியல் கட்சி தொடங்குகிறேன்: நடிகர் விஷால் அறிவிப்பு