தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் அமைந்துள்ள 19 மாவட்டங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: மாநில தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில், புதிதாக மறுவரையறை செய்யப்பட்ட, தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் தளி பேரூராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பெறுவது குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், புதிதாக வார்டு மறுவரையறை செய்யப்பட்ட, தரம் உயர்த்தப்பட்ட 4 மாநகராட்சிகள், 28 நகராட்சிகள் மற்றும் தளி பேரூராட்சி உட்பட அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் தொடர்பாக, தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும், தேர்தல் நடைபெற உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு கருவிகள், கட்டுப்பாட்டுக்கருவிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டுகள் உள்ளிட்ட அனைத்து வாக்குப்பதிவுப் பொருட்கள் போதுமான அளவில் இருப்பு உள்ளதா என்பது குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உறுதி செய்திட அறிவுரைகள் வழங்க வேண்டும்.

மேலும் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வாக்குப்பதிவு அலுவலர்கள் போதிய எண்ணிக்கையில் கணினியில் பதிவு செய்யப்பட்ட விவரத்தினை உறுதி செய்திடவும், தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி அமைந்துள்ள 19 மாவட்டங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்வது தொடர்பான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும். மேலும், புதிதாக வார்டு மறுவரையறை செய்யப்பட்ட, தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு புகைப்பட வாக்காளர் பட்டியல் தயார் செய்தல் குறித்தான முன் நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக தயார் நிலையினை உறுதி செய்ய வேண்டும்.

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அனைத்து அலுவலர்களும் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பதை உறுதி செய்திடவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு முதல்நிலை சரிபார்ப்பு செய்தல் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையர் அறிவுரை வழங்கினார். இக்கூட்டத்தில், சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) விசுமகாஜன், முதன்மை தேர்தல் அலுவலர் (நகராட்சிகள்) தனலட்சுமி, முதன்மை தேர்தல் அலுவலர் (ஊராட்சிகள்) சுப்பிரமணியம், உதவி ஆணையர் (தேர்தல்) அகஸ்ரீ சம்பத்குமார் மற்றும் ஆணையத்தின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: