×

பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் திருப்பம்; ஆளுநரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் புதிய சட்டம் நிறைவேற்றம்: முன்மாதிரியாக அதிரடி காட்டியது மகாராஷ்டிரா அரசு

மும்பை: பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் முக்கிய திருப்பமாக ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மகாராஷ்டிரா அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. இதன் மூலம் முன்மாதிரியாக மகாராஷ்டிரா அரசு அதிரடி காட்டியுள்ளதால், எதிர்கட்சி ஆளும் மாநில முதல்வர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், அம்மாநில ஆளுநர் ஸ்ரீ பகத் சிங் கோஷியாரிக்கும், மாநில அரசுக்கும் நிர்வாக ரீதியாக மோதல் அடிக்கடி ஏற்பட்டு வருவதால் குழப்பங்கள் நீடிக்கின்றன.

இந்நிலையில், அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் வேந்தராக செயல்படும் ஆளுநர், பல்கலைக்கழக தேடல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் துணைவேந்தர்களை நியமனம் செய்கிறார். இதில், மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதால் துணை வேந்தர்களை நியமனம் செய்வதில் ஆளுநருக்கான அதிகாரத்தை குறைக்கும் வகையில் நேற்று நடைபெற்ற சட்டப் பேரவை கூட்டத் தொடரின் போது, மகாராஷ்டிரா பொதுப்  பல்கலைக்கழகங்கள் சட்டம், 2016ல் திருத்தங்கள் செய்யப்பட்டது. அதற்கான மசோதா  சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

இந்த புதிய சட்டத்தின் மூலம் மாநிலப்  பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரங்கள்  குறைக்கப்படும். அதாவது 5 பேர் கொண்ட துணை வேந்தர் பட்டியலை மாநில அரசுக்கு தேடல்  குழு பரிந்துரை செய்ய வேண்டும். அவர்களில் இரண்டு பேரை தேர்வு ெசய்து அரசின் சார்பில் ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்படும். அதிலிருந்து ஒருவரை, 30 நாட்களுக்குள் துணை வேந்தராக நியமிக்க வேண்டும் என்று மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது. தேடல் குழு பரிந்துரைத்த பெயர்களை அரசு ஏற்கவில்லை என்றால், அதே குழு அல்லது புதிய குழுவின் மூலம் புதிய பெயர் பட்டியலை கோர முடியும்.

எனவே, அரசின் சார்பில் பரிசீலிக்கப்படும் ஒருவரே துணை வேந்தராக நியமனம் செய்யப்படுவார் என்பது உறுதியாகிறது. மேலும், புதிய மசோதாவின்படி உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கான அமைச்சர் மூலம் பல்கலைக்கழகத்தின் சார்பு வேந்தர் பதவி உருவாக்கப்படும். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு ஆளுநர் (வேந்தர்) பங்கேற்காத பட்சத்தில், சார்பு வேந்தர் தலைமையில் பட்டமளிப்பு விழாவை நடத்த முடியும். சார்பு வேந்தராக நியமிக்கப்படுபவர், பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாக விவகாரங்கள் தொடர்பான எந்தவொரு தகவலை அளிக்கும் அதிகாரம் படைத்தவராக இருப்பார்.

அதேபோல் பல்கலைக்கழக செனட் மற்றும் மேலாண்மை கவுன்சில் உறுப்பினர்களை அரசால் பரிந்துரைக்கும் நபர்களை தேர்வு செய்ய முடியும். மராத்தி ெமாழியை மாநிலத்தின் அலுவல் மொழியாகவும், உள்ளூர் மொழியாகவும், மக்கள் தொடர்பு மொழியாகவும் பாதுகாக்கப்படும். இதற்காக மராத்தி மொழி மற்றும் இலக்கியங்களைப் பாதுகாக்கும் வாரியம் அமைக்கப்படும் என்று அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறை அமைச்சர் உதய் சமந்த் கூறுகையில், ‘தேசிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த கொள்கையின் அடிப்படையில் பார்த்தால் பொதுப் பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்தவும், மகாராஷ்டிர அரசு சில சட்டத் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது’ என்றார். மேற்கண்ட புதிய சட்ட மசோதாவை சட்டமன்றத்தின் கூட்டுத் தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்கட்சி தலைவரும், பாஜக முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் கோரிக்கை விடுத்தார். ஆனால், ஆளுங்கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மை பலத்தால் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ‘மகாராஷ்டிரா மாநில ஜனநாயக வரலாற்றில், இன்றைய தினம் ஒரு கருப்பு தினமாகும். உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அவசர அவசரமாக ஆளுநருக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றி உள்ளனர். பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனங்களில் ஆளுநரின் அதிகாரத்தைப் பறிக்க சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு சதி செய்துள்ளது. மேலும், இந்த அரசாங்கம் அரசியல் சாசனத்தின் அனைத்து வரம்புகளையும் மீறி உள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பாஜக மாணவர்கள் அமைப்பின் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.

இந்த விவகாரம் குறித்து ஆளுநர் பகத் சிங் கோஷியாரியிடம் புகார் அளிப்போம்; சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்வோம்’ என்றார்.
முன்னதாக ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மேற்குவங்கம், ஒடிசா, டெல்லி, கேரளா போன்ற எதிர்கட்சி ஆளும் மாநில முதல்வர்கள் குரல்களை எழுப்பி வரும் நிலையில், பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் மாநில ஆளுநரின் அதிகாரத்தை மகாராஷ்டிரா அரசு குறைத்துள்ளதால், இவ்விவகாரம் தேசிய அளவில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. மேலும், புதிய சட்டத்தால் மற்ற மாநிலங்களின் துணைவேந்தர் நியமன நடைமுறைகளில் புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் அளித்த பேட்டியில், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், தன்னை சரியாக நடத்தவில்ைல என்று பரபரப்பு புகாரை ெதரிவித்தார். இவ்வாறாக எதிர்கட்சிகள் ஆளும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநர் பதவி என்பது ஆட்சி நிர்வாகத்திற்கு குறுக்கீடு செய்யும் பதவியாகவே உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.


Tags : Maharashtra government , Twist in the appointment of university vice-chancellors; Maharashtra government sets an example by enacting a new law to usurp the power of the governor
× RELATED ஒன்றிய அரசின் பல்லாயிரம் கோடி ஒப்பந்தம் பெற்ற மேகா நிறுவனம்