×

திருச்செந்தூர் - பாலக்காடு எக்ஸ்பிரசில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைப்பு: பயணிகள் நெரிசலை தீர்க்க நடவடிக்கை

நெல்லை: திருச்செந்தூர் - பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் நாளை (30ம்தேதி) முதல் கூடுதலாக இரு பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அறுபடை வீடுகளை இணைக்கும் வகையில் திருச்செந்தூரில் இருந்து பழனி வரை இயக்கப்பட்ட ரயில், ஏற்கனவே பாலக்காடு வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட இந்த ரயில், 21 மாதங்களுக்கு பின்னர் கடந்த 16ம்தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் - பாலக்காடு ரயில் தற்போது எக்ஸ்பிரஸ் ரயிலாக செல்வதால், கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டணம் உயர்த்தப்பட்டாலும், அதற்கேற்ப கூடுதல் வசதிகள் இல்லை என்பது பயணிகளின் குறையாக இருந்தது.

மேலும் கூட்டம் அலைமோதியதால், உட்கார இடமின்றி, நின்று கொண்டே பயணிக்கும் அவலத்திற்கு பயணிகள் தள்ளப்பட்டனர். திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், நாசரேத், நெல்லை, கோவில்பட்டி என பல்வேறு இடங்களில் பயணிகள் கூட்டம் அதிகளவில் ஏறுவதால், விருதுநகரை தாண்டிய பின்னர் பயணிகள் கூட்டம் கழிப்பறை வரை காணப்பட்டது. இதுகுறித்து தமிழ்முரசில் செய்தி வெளியானது. திருமங்கலத்தில் ரயிலில் ஏற இடமில்லை என்பது குறித்து சமூக வலைத்தளம் மூலமாக ஒரு பயணி தெற்கு ரயில்வேக்கு புகாரும் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் திருச்செந்தூர் - பாலக்காடு ரயிலில் கூடுதலாக இரு பெட்டிகள் நாளை (30ம்தேதி) முதல் இணைக்கப்படுகின்றன. நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயிலின் பெட்டிகளே, பாலக்காட்டிற்கு செல்வதால், நெல்லை - திருச்செந்தூர் ரயிலிலும் கூடுதலாக இரு பெட்டிகள் நாளை முதல் இணைக்கப்படுகின்றன. அந்த வகையில் நாளை முதல் நெல்லை - திருச்செந்தூர் ரயிலிலும், திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் ரயிலிலும் கூடுதலாக இரு பெட்டிகள் இடம்பெறுகின்றன.

அதாவது பொதுபெட்டிகளின் எண்ணிக்கை 8ல் இருந்து 10 ஆக உயர்த்தப்படுகின்றன. நாளை மறுதினம் (31ம்தேதி) முதல் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் வரும் ரயிலில் கூடுதலாக இரு பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இதற்கான உத்தரவை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் பிறப்பித்துள்ளார். திருச்செந்தூ ர்- பாலக்காடு ரயிலில் கூடுதலாக இரு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோரிக்கை விடுத்த நெல்லை - தென்காசி மாவட்ட பயணிகள் சங்கத்தினருக்கும், மதுரை கோட்ட அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.


Tags : Thiruchendur - Palakkad Express 2 extra boxes: Passenger congestion
× RELATED நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து...