கடலூரில் கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

கடலூர்: கூட்டுறவு துறை இணைப்பதிவாளரின் கடலூர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டக சாலை இணைப்பதிவாளராக ரேணுகாம்பாள் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே கடலூர் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளராக பணியாற்றிய நிலையில் நேற்று வேலூர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் ரூ.2.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. வேலூரில் பல்வேறு இடங்களில் உள்ள ரேஷன் கடைகள், கூட்டுறவு பண்டக சாலை அடிப்படையில் இயங்கும் கடைகளுக்கு பல்வேறு பொருட்களை கொள்முதல் செய்ததில் லஞ்சமாக பணம் பெற்றதாகவும், அந்த பணம் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வந்த தகவலை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ரூ.2.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடலூர் நத்தப்பட்டு பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான வீட்டில் அவரது சகோதரி மற்றும் அவரும் அந்த வீட்டில் தங்கியிருந்த நிலையில் இன்று பிற்பகல் முதல் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையில் போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர் பணிபுரிந்த பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: