பட்டாசு தொழிலில் தடையை போக்கும் வகையில் நடவடிக்கை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1,700 பட்டாசு ஆலைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு நேரடியாகவும், சார்பு தொழில் மூலமாகவும் சுமார் 10 லட்சம் பேர் வேலை செய்கின்றனர். இந்நிலையில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபடுகிறது, பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் வேதிப்பொருளை பயன்படுத்த கூடாது உள்ளிட்ட சில காரணத்தை காட்டி பட்டாசை தடை செய்வது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பட்டாசு ஆலைகள் மூடி கிடக்கின்றன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் சிரமத்தில் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு வேறு எந்த தொழில் தெரியாத நிலையில் மாற்று வேலை கொடுப்பதற்கு அரசோ அல்லது தனியாரோ முன்வரவில்லை. பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருட்கள் சம்பந்தமாக அரசு துறை சார்ந்த அதிகாரிகள், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கொண்ட குழு அமைத்து பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும். குறிப்பாக சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, பட்டாசு ஆலையின் பாதுகாப்பு, தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பு, லாபகரமாக தொழிலில் ஈடுபடுவது உள்ளிட்ட சில முக்கிய அம்சங்களை கவனத்தில் கொண்டு பட்டாசு தொழிலை பாதுகாப்பது தமிழக அரசின் கடமை. எனவே நிலுவையில் உள்ள வழக்கினை கவனத்தில் கொண்டு, அவர்களின் கோரிக்கையை ஏற்று, பட்டாசு தொழிலை பாதுகாக்க, தொழிலாளர்கள் நலன் காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: