காங்கோவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட பட்டை தீட்டப்படாத வைர கற்கள் பறிமுதல்: மும்பை வாலிபர் கைது

மீனம்பாக்கம்: ஆப்ரிக்க நாடான காங்கோவில் இருந்து துபாய் வழியாக சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.11 லட்சம் மதிப்புடைய 717.95 கேரட் பட்டை தீட்டப்படாத வைர கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மும்பையை சேர்ந்த வாலிபரை சுங்கத்துறையினர் கைது செய்தனர். ஆப்ரிக்க நாட்டில் இருந்து பட்டை தீட்டப்படாத வைரக்கற்கள் விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர்.

உடனே வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் மற்றும் சுங்க துறையினர் இணைந்து, சர்வதேச விமான பயணிகளை, குறிப்பாக ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து சோதனையிட்டனர். இந்நிலையில் துபாயில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகளை கண்காணித்தபோது, மும்பையை சேர்ந்த வாலிபர், ஆப்ரிக்க நாடான காங்கோவில் இருந்து துபாய் வழியாக சென்னை வந்தது தெரிந்தது. அவரை தீவிரமாக சோதனையிட்டனர். உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 3 பாலிதீன் கவர்களை எடுத்து பிரித்து பார்த்தனர். அதற்குள் பட்டை தீட்டப்படாத வைரக்கற்கள் 717.95 கேரட் இருந்ததை கண்டுபிடித்தனர்.

சர்வதேச மதிப்பு ரூ.11 லட்சம். அவற்றை பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பட்டை தீட்டப்படாத இந்த வைர கற்கள், ஆப்ரிக்கா நாடுகளில் அதிகளவில் கிடைக்கும். அதை கடத்தி வந்து பட்டை தீட்டி, வைரக்கற்களுக்கான வடிவம் கொடுத்த பின்பு, இதன் மதிப்பு கோடிக்கணக்கில் உயர்ந்து விடும் என்று கூறப்படுகிறது. அதனால்தான் இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் நடக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

Related Stories: