×

தனது செயல்பாட்டின் மூலம் மோடி, இந்தியாவை சிறுமைப்படுத்துகிறார் : கருத்தரங்கில் கே.எஸ்.அழகிரி பேச்சு

தண்டையார்பேட்டை: வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், வங்காளதேச விடுதலையின் 50வது ஆண்டு பொன்விழா மற்றும்  இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 137வது நிறுவன நாள் விழா கருத்தரங்கம் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வங்காளதேச விடுதலைக்கு வித்திட்ட இந்திராகாந்தியின் வீரமிகு செயலை பாராட்டி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது; வங்காளதேசம் விடுதலை பெற்ற 50வது ஆண்டை கொண்டாடும் விதமாக விழா எடுத்த பிரதமர் மோடி, வங்காளதேச விடுதலைக்கு காரணமாக இருந்த இந்திராகாந்தியை பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ஆர்எஸ்எஸ், பாரத ஜனசங்கம், இந்து மகா சபா, பாஜகவை சேர்ந்த ஒருவர் கூட விடுதலை போராட்டத்திற்காக ஒரு மணிநேரம் கூட சிறையில் இருந்தது கிடையாது. நாடு இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்ததற்கு நேருவும் காங்கிரஸ் கட்சியும் தான் காரணம். நேருவை பற்றி தவறான கருத்துக்கள் கொண்ட புத்தக வெளியிட்டு விழாவில், நேருவை பற்றி தவறாக பேசிய எச்.ராஜாவை வன்மையாக கண்டிக்கின்றேன்.

ஐரோப்பாவிற்கு இணையாக இந்தியா வளர்ந்ததற்கு காரணம் 50 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியின் ஆட்சிதான். இதற்கு நேருதான் வித்திட்டவர். நேருவின் புகழை மறைக்க பாஜ முயற்சி செய்கிறது. அதனை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. நேருவின் குடும்பத்தை அழிக்க பாஜகவினர் குறிவைக்கின்றனர். இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் வன்முறையால் கொல்லப்பட்டனர். மகாத்மா காந்தி, இந்திரா, ராஜீவ் காந்தி ஆகியோர் கொள்கைக்காக உயிரைவிட்டனர்.
மோடியை போல் பல லட்சம் மதிப்புள்ள கோட்டை அணிந்து வலம் வரவில்லை. நம் நாட்டில் 70 சதவீத மக்கள் மாற்று உடையில்லாமல் வாழ்ந்த நிலையை கண்டு தனது கோட், பேண்ட் போன்ற ஆடைகளை களைந்து 4 முழ வேட்டியை உடுத்திக்கொண்டார் மகாத்மா காந்தி. அவர் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. மக்களுக்காக போராடியவர். இது போன்ற வரலாறு வேறு எந்த கட்சிக்கும் கிடையாது.

பிரதமர் மோடி சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்.ஆனால் அவர் பிரதமரானபிறகு அணியும் ஆடையின் மதிப்பு பல லட்சம் ரூபாய். இதை பாரதிய ஜனதா கட்சி எப்படி அனுமதித்தது? பிரதமர் மோடி தன் செயல்பாட்டின் மூலம் நாட்டை சிறுமைப்படுத்த நினைக்கின்றார். இவ்வாறு அழகிரி பேசினார். கருத்தரங்கில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான உ.பலராமன், கோபண்ணா, பொன்.கிருஷ்னமுர்த்தி, சென்னை மாவட்ட தலைவர்கள் முத்தழகன், ரஞ்சன் குமார், மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜார்ஜ் ராபின்சன், மகிளா காங்கிரஸ் மாநில தலைவர் சுதா ராமகிருஷ்ணன், மாநில செயலாளர்கள் தளபதி பாஸ்கர், கடல் தமிழ்வாணன், வட சென்னை ரஞ்சித், முனிஸ்வர் கனேஷ் உள்பட 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.



Tags : Modi ,India ,S. Salagiri , Modi, India, Seminar, KS Alagiri
× RELATED ஏஐ தொழில்நுட்பத்தில் உலகை இந்தியா...