மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததில் கல்லூரி மாணவிக்கு குழந்தை: 2 குழந்தைகளின் தந்தை கைது

திருவண்ணாமலை: மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததில் கல்லூரி மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுதொடர்பாக 2 குழந்தைகளின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். செய்யாறு பழனி தெருவை சேர்ந்தவர் சுதாகர்(36), பைனான்ஸ் ஊழியர்.

இவருக்கு திருமணமாகி ராதா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சுதாகரும், கல்லூரி மாணவியும் கடந்த 5 ஆண்டுகளாக பழகி வந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் சுதாகர், கல்லூரி மாணவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து அங்கு சென்றுள்ளார். அப்போது தான் வாங்கி சென்ற குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார். இதை குடித்த மாணவி மயங்கி விழுந்துள்ளார். அப்போது மாணவியை சுதாகர் பாலியல் பலாத்காரம் செய்தாராம். மயக்கம் தெளிந்து எழுந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து சுதாகரிடமும் தகராறு செய்துள்ளார்.

அதற்கு அவர் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என சமாதானம் செய்துள்ளார். இதையடுத்து திருமண ஆசை காட்டி அடிக்கடி மாணவியிடம் சுதாகர் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் மாணவி கர்ப்பமானார். கடந்த 24ம்தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து கல்லூரி மாணவி செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர்.

Related Stories: