×

ஒமிக்ரானை குணப்படுத்த மூலிகை மருந்து ரெடி; ஆந்திராவில் அனந்தய்யா மீண்டும் அறிவிப்பு: ஒன்றிய ஆயுஷ் நிறுவனம் தடை

திருமலை: ஒமிக்ரானை குணப்படுத்த மூலிகை மருந்து இருப்பதாக ஆந்திராவை சேர்ந்த அனந்தய்யா மீண்டும் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு ஒன்றிய ஆயுஷ் நிறுவனம் தடை விதித்துள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணம்பட்டினத்தை சேர்ந்தவர் அனந்தய்யா. இவர் கடந்த ஆண்டு கொரோனா நோயை இயற்கை மூலிகைகொண்டு குணப்படுத்த முடியும் எனக்கூறி மூலிகை மருந்தை நோயாளிகளுக்கு வழங்கினார். இருப்பினும் அந்த மூலிகை மருந்துக்கு ஒன்றிய ஆயுஷ் நிறுவனம் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் விருப்பம் உள்ளவர்கள் அவரது மருந்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும், ஆனால் அனந்தய்யாவின் மூலிகை மருந்தை ஒன்றிய ஆயுஷ் நிறுவனம் அங்கீகரிக்காது எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது கொரோனாவின் 3வது அலையாக ஒமிக்ரான் தொற்று கருதப்படுகிறது. நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே பாதிப்பு குறையும் என ஒன்றிய அரசு கூறி வருகிறது. ஆனால் ஒமிக்ரான் நோய்க்கும் தன்னிடம் மற்றொரு மூலிகை மருந்து உள்ளதாகவும், அதனை உட்கொண்டால் 48 மணி நேரத்தில் ஒமிக்ரான் நோயை குணப்படுத்த முடியும் எனவும் அனந்தய்யா நேற்று அதிரடியாக அறிவித்தார். தன்னை தேடிவருபவர்களுக்கு அந்த மருந்தை தர தயாராக உள்ளதாகவும் கூறினார். இந்நிலையில் ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் நேற்று மாலை ஒரு அவசர அறிவிப்பு வெளியிட்டது.

அதில், அனந்தய்யாவின் ஒமிக்ரான் மருந்தை அங்கீகரிக்க முடியாது என தெரிவித்தது. இதனிடையே நேற்றிரவு நெல்லூர் மாவட்ட உதவி கலெக்டர் கணேஷ்குமார், அனந்தய்யாவுக்கு ஒரு நோட்டீஸ் வழங்கினார். அதில், ‘ஒமிக்ரான் தடுப்பு மருந்தை எந்த மூலிகை கொண்டு தயாரிக்கிறீர்கள்? பாதிப்பு குறையும் என்பதற்கான ஆதாரங்கள் என்ன? இதுதொடர்பாக விளக்கவேண்டும்’ என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனிடையே அனந்தய்யா வசிக்கும் கிருஷணம்பட்டினம் கிராம மக்கள் நேற்றிரவு அவசரமாக பஞ்சாயத்தை கூட்டினர். அதில், அனந்தய்யா, மருந்து விநியோகம் செய்வதால் பல மாநிலத்தவர்கள் கிராமத்திற்குள் வருகின்றனர்.

இதனால் நோய் தொற்று ஏற்படுகிறது. எனவே அவர் மருந்து விநியோகம் செய்யக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றினர். அதன்பின்னர் அவரது வீட்டை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த நெல்லூர் போலீசார், கிராம மக்களை சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். இருப்பினும் அனந்தய்யா நேற்றிரவு கூறுகையில், ‘ஒமிக்ரான் நோயை குணப்படுத்த என்னிடம் மருந்து உள்ளது. எனவே மாநில அரசு அனுமதித்ததால் ஆன்லைனில் விற்கவும் தயாராக உள்ளேன்’ என தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு அங்கீகரிக்க முடியாது என தெரிவித்த நிலையில் தற்போது மாநில அரசை அவர் நாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Omicron ,Anantaiya ,Andhra ,Union Ayush Institute , Ananthayya re-announces herbal medicine ready to cure Omigran in Andhra Pradesh: Union AYUSH banned
× RELATED நில உரிமை சட்டம் குறித்து தவறான...