×

கொரோனா பரவலால் திணறும் டெல்லி!: தீவிர கட்டுப்பாடுகளால் மெட்ரோ, பேருந்தில் இடம்பிடிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்..!!

டெல்லி: ஒமிக்ரான் கிருமி பரவலை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லியில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தலைநகர் டெல்லியில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக டெல்லியில் தான் 238 பேர் ஒமிக்ரான் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் டெல்லியில் பெருந்தொற்று கட்டுப்பாடுகள் காலை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன.

மெட்ரோ ரயில்கள் மற்றும் மாநகர பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயக்கப்படுகின்றன. பயணிகள் நின்று பயணிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 50 விழுக்காடு பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயணிகளின் நீண்ட வரிசை காணப்படுகிறது. டெல்லியில் விடுக்கப்பட்டுள்ள மஞ்சள் எச்சரிக்கை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடம், அழகு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. திருமணம் மற்றும் இறுதி சடங்கு உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே கலந்துக்கொள்ள வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மத மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை. டெல்லி அரசின் பெருந்தொற்று கட்டுப்பாடு எதிரொலியாக மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதால் பல இடங்களில் சாலைகள் வெறிசோடி காணப்படுகின்றன.


Tags : Delhi , Corona, Delhi, Metro, Bus Stand, Crowd
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...