×

குளத்தூர் வட்டம் இறையூர் கிராம பகுதியில் மகாவீரர் சிற்பத்துடன் கழுமரம் நந்தி லிங்கம் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் இறையூர் கிராமப்பகுதியிலிருந்து முத்துக்காடு செல்லும் சாலையின் வடபுறமாக மகாவீரர் சமண சிற்பத்தினை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை வரலாறு படிக்கும் மாணவர்கள் மாரியம்மாள், ரெங்கராஜ், பிரியங்கா, லோகேஸ்வரன் ஆகியோர் கண்டுபிடித்தனர். அதனை தொடர்ந்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் மணிகண்டன் தலைமையில் உறுப்பினர்கள் பேராசிரியர் கருப்பையா, கவிஞர் மூட்டாம்பட்டி ராஜூ, ராஜாங்கம், இளங்கோ ஆகியோர் தொடராய்வு மேற்கொண்ட போது கழுமரம், சதுர ஆவுடையுடன் கூடிய லிங்கம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

இது குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் நிறுவனர் மணிகண்டன் கூறியதாவது,பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சிற்பம், சமண மதத்தின் 24வது தீர்த்தங்கரரான வர்த்தமானர் எனும் மகாவீரர் திருமேனி என்பது உறுதி செய்யப்பட்டது. இச்சிற்பம் 89 சென்டிமீட்டர் உயரமும், 54 சென்டிமீட்டர் அகலத்துடனும் காணப்படுகிறது. மேலும் இச்சிற்பம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு 100 மீட்டர் தொலைவில் நாட்டார் வழிபாட்டு காமாட்சி அம்மன் ஆலயம் உள்ளது.

அதன் எதிர்புறத்தில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லாலான 170 சென்டிமீட்டர் உயரமுடைய கழுமரம் ஒன்றும் வழிபாட்டில் உள்ளது. இவ்விடத்திற்கு அருகில் பாண்டியர் கலைப்பாணியிலான சதுர வடிவ ஆவுடையுடன் கூடிய லிங்கம், நாயுடன் கூடிய பைரவர் சிற்பத்தின் உடைந்த சிற்பம், முழுதும் சிதைந்த நந்தி, பதிமூன்றாம் நூற்றாண்டைச்சேர்ந்த விநாயகர், வீரபத்திரர் சிற்பம் உள்ளிட்டவையோடு கூடிய ஏழுகன்னியர் சிற்பத்தொகுதி, கற்கோவிலின் சிதிலமடைந்த அடிமானம் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பத்தாம் நூற்றாண்டு கலைப்பாணியில் காணப்படும் இச்சிற்பம் திகம்பராக தியான கோலத்துடன், சிதைந்த சுருள் முடி தலையுடனும், மூடிய கண்கள், தெளிவற்ற மூக்கு , நீண்ட துளையுடைய காதுகள் , விரிந்த மார்புடன் அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது . தலையின் பின்புறமாக முக்காலத்தையும் உணர்த்தும் விதமாக ஒளிவீசும் பிரபா வளையமும், மேற்பகுதியில் சந்திராதித்தம், நித்த விநோதம் , சகல பாசானம் எனும் முக்குடையும், பின்புலத்தில் முக்குடைக்கு மேலாக குங்கிலிய மரமும் அதில் தொங்கும் குஞ்சமும் காட்டப்பட்டுள்ளன.

முதுகின் பின்புறம் சாய்மானத்திற்கான திண்டு அமைக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் பக்கவாட்டில் சித்தாக்கியா இயக்கியும், இயக்கன் மாதங்கனும் உடலில் ஆபரணங்களுடனும் தலையில் கிரீடத்துடனும், ஒரு கையில் சாமரத்தை தோளில் சாய்த்தவாறும் , மற்றொரு கையை இடுப்பில் வைத்த நிலையிலும் வடிக்கப்பட்டுள்ளனர்,சமணர் கழுவேற்றப்பட்டது குறித்து பல்வேறு இலக்கியங்கள் சான்று பகிர்கிறது.

சமண சிற்பமும் அதனருகே கழுமரமும், சிதைந்த சைவ கோவிலும் அருகருகே அமைந்துள்ளதால் சமணர்களை கழுவேற்றிய இடமாக இறையூர் இருந்ததா என்பது குறித்து தொடர் ஆய்வுகளுக்கு இந்த புதிய சான்றுகள் வழிவகை செய்கிறது என்றார்.ஆய்வுப்பணியின் போது பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் அனுபாரதி, கனிமொழி, தர், உள்ளூர் பொதுமக்கள் பூசாரி ரெங்கராசு, இறையூர் ரெங்கராசு, முருகன், முருகையா உள்ளிட்ட பொதுமக்கள் உடனிருந்தனர்.

Tags : Khalamaram Nandhi Lingam ,Mahaverer ,Khalutur Circle Shiryur , Pudukkottai: Pudukkottai District Kulathur Circle Mahavira Jain on the north side of the road from Iraiyur village to Muthukkadu
× RELATED செங்கல் சூளை உரிமையாளர்...