×

வேளாண் கழிவுகளை பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிக்கலாம்-வேளாண்மை விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநர் தகவல்

தா.பழூர் : வேளாண் கழிவுகளை பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிக்கலாம் என்று வேளாண்மை விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநர் ராஜ்கலா தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி வேளாண் அறிவியல் மையத்தில் 27ம் தேதி முதல் 15 நாட்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வேளாண் கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி நடைபெற்று வருகிறது. இப்பயிற்ச்சிக்கு வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுகண்ணன் தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கம் பற்றியும் வேளாண் கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் பற்றி விரிவாக பேசினார்.

வேளாண் கழிவு மேலாண்மையில் மண்புழு உரம் தயாரித்தல் பற்றி வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநர் ராஜ்கலா கூறுகையில், மண்புழு உரம் என்பது தாவரம் மற்றும் விலங்கு கழிவுகளை ஆப்பிரிக்கன் மண் புழுக்களின் உதவியால் மட்க வைத்தலாகும். எளிதில் மட்கக்கூடிய பயிர் கழிவுகளான கரும்பு சோகை, வாழைத்தண்டு, வைக்கோல், மக்காச்சோளத்தட்டை, தென்னை நார்க்கழிவுகள், பயறு வகைப்பயிர்களின் கழிவுகள், களைகள் மற்றும் கீரைகளை சேகரித்து கொள்ள வேண்டும். இவற்றை சிறு துண்டுகளாக வெட்டி அவற்றின் ஈரப்பதம் 20-40 சதவீதம் இருக்குமாறு நிழலில் உலர்த்தி பின்னர் சேகரித்து கொள்ளலாம். மண்புழு அதிகமாக விரும்பி உண்ணும் பண்ணை கழிவுகளான மாட்டெரு, கோழியெரு, ஆட்டெரு மற்றும் பன்றி எரு போன்றவற்றையும் நன்கு காய வைத்து பின்னர் சேகரித்து கொள்ள வேண்டும்.

அதன்பின் இதனை மண்புழு உரத் தயாரிப்பு படுக்கையில் போட வேண்டும். சில்பானின் பைகள் வைக்கும் இடம் சற்றே மேடாக மழை நீர் தேங்காத பகுதியாக இருக்கும்படி தேர்வு செய்ய வேண்டும். மேலும் நாள் முழுவதும் நன்கு அடர்ந்த நிழல் இருக்கும் இடமாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு தேர்வு செய்த இடத்தில் தரைமட்டமாகவும், மண் இறுக்கமாகவும் இருத்தல் வேண்டும்.

அறுவடை செய்யப்பட்ட மண்புழு உரத்தை இருட்டான அறையில் 40 சதவிகித ஈரப்பதத்தில் சூரிய ஒளிபடாதவாறு வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதால் ஈரப்பதம் வீணாவதை தடுக்கலாம். வேளாண் கழிவுகளை பயன்படுத்தி மண்புழு உரம் தயாரித்து விவசாயத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் மண்வளம் பாதுகாப்பதோடு சுற்றுப்புறசூழலும் பாதுகாக்கப்படுகிறது என்று கூறினார்.

Tags : Dhaka: Agricultural extension technician Rajkala has said that vermicompost can be made using agricultural waste.
× RELATED பலாப்பழத்தை பறிக்க மரத்தை...