நாதஸ்வர மேதை அருணாசலத்தின் சொந்த ஊரான காருக்குறிச்சியில் இசைப்பள்ளி அமைக்க முயற்சி-அமைச்சர் தங்கம்தென்னரசு பேச்சு

நெல்லை :  நாதஸ்வர மேதை அருணாசலத்தின் சொந்த ஊரான காருக்குறிச்சியில் இசைப்பள்ளி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படுமென அமைச்சர் தங்கம்தென்னரசு பேசினார்.

பாளை. அருங்காட்சியகத்தில் நெல்லை மாவட்ட கலைமன்ற துவக்க விழா, காணியின மக்களின் வாழ்வியல் குறித்த குறும்பட முன்னோட்டம் வெளியீடு மற்றும்  நூல் வெளியீட்டு விழா நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை வகித்து பேசுகையில், நெல்லை மாவட்டம் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்தவை. தாமிரபரணி ஆற்றங்கரையோர தமிழர்களின் நாகரீகம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை. இதனை ஆய்வு செய்து தாமிரபரணி ஆற்று நாகரீகமே உலகில் முதலாவதாக தோன்றியது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். வீரம், இரக்கம், தியாகம் மற்றும் வந்தவர்களை வாழ வைக்கும் பூமி, ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியின் போது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்காக நாங்குநேரியில் தொழில்நுட்ப பூங்கா துவங்கப்பட்டது. அதன் வளர்ச்சியின் வேகத்தை அதிகப்படுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக நிலம், நீர், மனிதன் என்ற தலைப்பில் எழுத்தாளர் நாறும்பூநாதன் எழுதிய நூல் மற்றும் காணியின மக்களின் வாழ்வியல் குறித்த குறும்படம் முன்னோட்டத்தை தொழில் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு வெளியிட சபாநாயகர் அப்பாவு பெற்றுக் கொண்டார். விழாவில் அமைச்சர் தங்கம்தென்னரசு பேசியதாவது: நெல்லை மாவட்டம் பல்வேறு வரலாற்று சிறப்புகளை உள்ளடக்கியது.

போராட்ட களங்களிலும் முத்திரை பதித்த மாவட்டம். நாட்டுப்புற கலைஞர்கள் கடந்த 2 ஆண்டுகளாக நலிவடைந்து உள்ளனர். அவர்களின் வாழ்வியலை மேம்படுத்தும் வகையில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி நாட்டுப்புற கலைநிகழ்ச்சி நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த கலைநிகழ்ச்சிகள், சென்னை மற்றும் மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் நடத்தப்படுகிறது.

நெல்லை மாவட்டத்திலும் நடத்த வாய்ப்பு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். நாதஸ்வர மேதை அருணாசலத்தின் சொந்த ஊரான காருக்குறிச்சியில் இசைப்பள்ளி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும், என்றார்.

நிகழ்ச்சியில் அப்துல்வஹாப் எம்எல்ஏ, கலெக்டர் விஷ்ணு, கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அரசு அருங்காட்சியக காப்பாளர் சிவ சத்தியவள்ளி நன்றி கூறினார். விழாவில் உவரி பரதவர் கலியலாட்டம்,  மற்றும் விளாத்திகுளத்தை சேர்ந்த கலைக்குழுவினரின் எருதுவிரட்டு மேளம் ஆகிய  கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

Related Stories: