கூடலூரில் புதிய தொகுப்பு வீடுகளுக்கு மின் இணைப்பு கிடைக்காமல் பழங்குடியின மக்கள் அலைக்கழிப்பு

கூடலூர் : கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 20வது வார்டுக்கு உட்பட்ட புறமனவயல் ஆதிவாசி குடியிருப்புகளில் புதிதாக 48 குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளன. இந்த வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆகியும் இதுவரை மின் இணைப்பு வழங்கவில்லை என குடியிருப்புவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக நேற்று அங்குள்ள பழங்குடியின பெண்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கூடலூர் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.

நகராட்சி நிர்வாகம் சார்பில் தங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டி வழங்கப்பட்டதாகவும், அதற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றும் அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதனையடுத்து நகராட்சி அதிகாரிகள் மின் இணைப்பு வழங்குவது குறித்து நீங்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்க வேண்டும் என கூறியதை அடுத்து அங்கிருந்து கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு கோட்டாட்சியர் இல்லாததால் அங்குள்ள அதிகாரி, புகாரை பெற்றுக்கொண்டு மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டறிந்து தகவல் தெரிவிப்பதாக கூறினர்.

இதையடுத்து அவர்கள் களைந்து  சென்றனர். இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில்,``வீடுகள் கட்டி கொடுத்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது. பலருக்கு ஏற்கனவே இருந்த பழைய வீடுகளில் உள்ள மின் இணைப்பு உள்ளது. ஆனால், இதுவரை பழைய  மின் இணைப்பு மற்றும் புதிதாக வழங்கவேண்டிய மின் இணைப்பு எதுவும் வழங்கப்படவில்லை.மின் இணைப்பு இல்லாததால் இரவுநேரத்தில் வெளிச்சம் இல்லாமல் வீடுகளுக்குள் குழந்தைகளுடன் வசிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. மின் இணைப்பு வழங்க கோரி ஒவ்வொரு அலுவலகமாக அலைந்து திரிந்தும் இதுவரை உரிய நடவடிக்கை இல்லை. எனவே, தங்களுக்கு விரைவாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: