சென்னை அசோக் நகரில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தெரு, நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிப்பு

சென்னை: சென்னை அசோக் நகர் எல்.ஜி.ஜி.எஸ்.காலனி 19வது தெருவில் உள்ள 2 வீடுகளில் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 10 முதல் 25 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாகும். சென்னை அசோக் நகரில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தெரு, நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகர் எல்.ஜி.ஜி.எஸ் காலனியில் 19வது தெரு, நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அசோக்நகரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னையில் 3 இடங்களில் கொரோனா கேர் சென்டர்கள் அமைக்கப்பட்டு 500 கொரோனா படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. சென்னை வர்த்தக மையத்தில் 800 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 15 முதல் 18 வயதுள்ள மாணவர்கள் 33,20,000 பேருக்கு தடுப்பூசி போட வேண்டி இருக்கிறது. வரும் 3ஆம் தேதி போரூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளில் இந்த பணி தொடர்ந்து நடைபெற உள்ளது. பள்ளி நாட்களில் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜனவரி 10ஆம் தேதி முதல் 60 வயது மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணி சென்னையில் தொடங்கப்படும்.

தமிழகத்தில் மொத்தம் 45 பேருக்கு ஒமிக்ரான் தொற்று ஒன்றிய அரசின் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த 45 பேரில் 16 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 129 பேருக்கு ஒமிக்ரானுக்கான அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த 129 பேரின் மாதிரிகளும் ஒன்றிய அரசின் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட அனைவருமே முதல்நிலை தொற்றிலேயே உள்ளனர். யாருக்கும் ஆக்சிஜன் வசதி தேவைப்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள 39,537 தெருக்களில் 507 தெருக்களில் கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 429 தெருக்களில் 3 பேருக்கும் குறைவாகவே தொற்று எண்ணிக்கை உள்ளது. எனவே தெருக்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் வீட்டு தனிமையிலும், மருத்துவமனையிலும் உள்ளனர். கடந்த சில நாட்களில் 78 தெருக்களில் 42க்கும் மேற்பட்ட தெருக்களில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 4க்கும் அதிகமாக உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Related Stories: