×

ரூ.3 கோடி மோசடி வழக்கில் தலைமறைவு ராஜேந்திரபாலாஜியுடன் தொடர்பு அதிமுக நிர்வாகிகள் 2 பேர் சிக்கினர் ஜோலார்பேட்டையில் சுற்றிவளைத்தது தனிப்படை

ஜோலார்பேட்டை:  ஆவினில் வேலை வாங்கித்தருவதாக ₹3 கோடி மோசடி வழக்கில் தலைமறைவான மாஜி அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு உதவி செய்ததாக திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் 2 பேரை தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை சுற்றிவளைத்தனர். இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராஜேந்திர பாலாஜி வேலூரில் பதுங்கியிருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ₹3 கோடி மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை 8 தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க குற்றப்பிரிவு போலீசார், அவரை தேடப்படும் குற்றவாளி என அறிவித்து விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பினர். இந்நிலையில், தலைமறைவான ராஜேந்திரபாலாஜியின் உறவினர்கள், தொடர்பாளர்கள், ஆதரவாளர்கள் உட்பட 600 பேரின் செல்போன் எண்களை சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

அதில்,  திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அக்ராகரம் பகுதியை சேர்ந்த  அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை செயலாளர் விக்னேஷ்வரன், ேகாடியூர் பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் பாசறை நகர செயலாளர் ஏழுமலை ஆகியோருடன் ராஜேந்திரபாலாஜி செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இவர்களுடைய செல்போன்களை தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இதையடுத்து சிவகாசி டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு ஜோலார்பேட்டைக்கு வந்தனர். விக்னேஷ்வரன் மற்றும் ஏழுமலையை நேற்று அதிகாலை மடக்கி பிடித்து விசாரணைக்காக விருதுநகருக்கு அழைத்து சென்றனர். இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர்  ராஜேந்திரபாலாஜி, முன்னாள் அமைச்சர் வீரமணிக்கு நெருங்கிய தொடர்புடையவர் என்பதால்  திருப்பத்தூர் மாவட்டத்தில் வீரமணிக்கு சொந்தமான ெசாகுசு விடுதி,  ஏலகிரிமலையில் உள்ள ஓட்டல், திருப்பத்தூரில் உள்ள ஓட்டல் ஆகியவற்றில் அவர் பதுங்கியுள்ளாரா என மாவட்டம் முழுவதும் தனிப்படையினர் ேதடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். மேலும்,  ஏலகிரிமலையில் உள்ள தனியார் ரிசார்ட்டுகள் மற்றும் காட்டுப்பகுதியில் உள்ள  ரிசார்ட்டுகளிலும் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் எஸ்பி  பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘விருதுநகர் மாவட்ட எஸ்பி மனோகரன் கேட்டுக்கொண்டபடி, ஜோலார்பேட்டை  மற்றும் நாட்றம்பள்ளியை சேர்ந்த 2 அதிமுக நிர்வாகிகளை அனுப்பி  வைத்துள்ளோம். ராஜேந்திர பாலாஜி, மேற்கண்ட 2 பேரிடம் போனில்  தொடர்பு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனை தொடர்ந்து மாவட்டத்தில்  அனைத்து போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு, ராஜேந்திரபாலாஜி மாவட்டத்தில்  எங்காவது பதுங்கியுள்ளாரா என தேடி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். மேலும் வேலூரில்  அவர் பதுங்கியிருப்பதாக தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசாரும் வேலூரில் தேடுதல் வேட்டை நடத்த திட்டமிட்டுள்ளனர். எனவே தலைமறைவாக உள்ள ராஜேந்திரபாலாஜி விரைவில் போலீசாரிடம்  சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Rajendrapalaji ,Jolarpatta , AIADMK executives linked to Rajendrapalaji in Rs 3 crore fraud case: Jolarpettai
× RELATED ரூ.3 கோடி மோசடி வழக்கில் தலைமறைவு...