×

தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு நீண்ட நாள் ஆகியும் ஒன்றிய அரசு நிவாரணத் தொகையை வழங்காதது கண்டிக்கத்தக்கது: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: காங்கிரஸ் கட்சியின் 137வது நிறுவன தினம், தமிழக காங்கிரஸ் சார்பில் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. சத்தியமூர்த்திபவன் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 150 அடி உயர கொடிக் கம்பத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து சேவாதள தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்  அதை தொடர்ந்து, தலைவர்களின் உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், ஒரிசா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் டாக்டர் செல்லக்குமார் எம்பி, மாநில துணைத் தலைவர் கோபண்ணா, முன்னாள் பொருளாளர் நாசே ராமச்சந்திரன், மாநில பொதுச் செயலாளர் ஆலங்குளம் எம்.எஸ்.காமராஜ், மகிளா காங்கிரஸ் தலைவி சுதா ராமகிருஷ்ணன், மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், நாஞ்சில் பிரசாத், ஏ.ஜி.சிதம்பரம், மாவட்ட பொறுப்பாளர் சுமதி அன்பரசு மற்றும் மாநில நிர்வாகிகள் மயிலை தரணி, தளபதி பாஸ்கர், கடல் தமிழ்வாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.   
 
நிகழ்ச்சியின் போது, கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு இவ்வளவு நாட்கள் கழித்தும் இன்னும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு வழங்காதது கண்டிக்கதக்கது. தமிழகத்தில் ஏராளமான கைத்தறி நூல் சங்கங்கள் இருக்கின்றன. இதன் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுக்களை பெற்றுள்ளது. திருவொற்றியூர் கட்டிட விபத்துக்கு அதிமுக அரசு தான் காரணம்.   காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி அமைத்தால் அந்த கூட்டணி பாஜவிற்கு பலனளிக்கும். சீமான் ஒரு வெறுப்பு பேச்சை பேசி வருகிறார். அது வன்மையாக கண்டிக்கத்தக்கது.    இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Union government ,Tamil Nadu ,KS Alagiri , KS Alagiri's interview
× RELATED ஜவுளித்துணி, ஆயத்த ஆடை, தோல்பொருட்கள்...