ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை: கொரோனா தொற்றோடு முடியாது பல நோய்கள் உருவாகலாம்

புதுடெல்லி: ‘கொரோனா வைரஸ் மனித இனம் எதிர்கொள்ளும் கடைசி தொற்றுநோயாக இருக்காது. அடுத்தடுத்த பல தொற்றுநோய்களுக்கு நாம் தயாராக வேண்டும்’ என ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கட்டரஸ் எச்சரித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு முதல் முறையாக டிசம்பர் 27ம் தேதி சர்வதேச தொற்றுநோய் தயார்நிலை தினம் கடைபிடிக்கப்பட்டது. தொற்றுநோய்க்கான விழிப்புணர்வு, எதிர்கொள்ள தயாராதல் போன்ற விஷயங்களை மக்களிடம் பரப்ப ஐநாவும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து இந்நடவடிக்கையை எடுத்தன. இந்த ஆண்டின் சர்வதேச தொற்றுநோய் தயார்நிலை தினம் நேற்று முன்தினம்  கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி, ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கட்டரஸ் தனது டிவிட்டர் பதிவில், ‘‘கொரோனா வைரஸ் மனித இனம் எதிர்கொள்ளும் கடைசி தொற்றுநோயாக இருக்காது. கொரோனாவை எதிர்த்து போராடிக் கொண்டே, அடுத்ததடுத்த தொற்றுநோய்களுக்கும் நாம் தயாராக வேண்டும். சர்வதேச தொற்றுநோய் தயார்நிலை தினத்தை கடைபிடிக்கும் இந்த சமயத்தில் அதற்கான விழிப்புணர்வை பரப்பி, வேண்டிய முதலீடுகளை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்’’ என வலியுறுத்தினார். கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இந்த ஆண்டு 35 லட்சம் பேர் இறந்துள்ளனர். தற்போதும் வாரத்திற்கு 50,000 பேர் பலியாகி வருகின்றனர்.

Related Stories: