ஷமி வேகத்தில் சரிந்தது தென் ஆப்ரிக்கா: இந்தியா வலுவான முன்னிலைa

செஞ்சுரியன்:  தென் ஆப்ரிக்க அணியுடனான முதல் டெஸ்டில், இந்தியா வலுவான முன்னிலை பெற்றுள்ளது. சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன் எடுத்திருந்தது. கனமழை காரணமாக களம் ஈரமாக இருந்ததால் 2ம் நாள் ஆட்டம் முழுவதுமாக கைவிடப்பட்டது. கே.எல்.ராகுல் 122 ரன் , ரகானே 40 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

ராகுல் மேற்கொண்டு 1 ரன் மட்டுமே சேர்த்து ரபாடா வேகத்தில் விக்கெட் கீப்பர் டி காக் வசம் பிடிபட்டார். ரகானே 48 ரன் எடுத்து என்ஜிடி வேகத்தில் வெளியேற, அடுத்து வந்த அஷ்வின், ஷர்துல் இருவரும் தலா 4 ரன் மட்டுமே எடுத்து ரபாடா வேகத்தில் பெவிலியன் திரும்பினர். ஷமி 8 ரன், பும்ரா 14 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா முதல் இன்னிங்சில் 327 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (105.3 ஓவர்). சிராஜ் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா 31 ரன்னுக்கு கடைசி 5 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் லுங்கி என்ஜிடி 24 ஓவரில் 5 மெய்டன் உள்பட 71 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். ரபாடா 3, மார்கோ 1 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா இந்திய வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறியது.

கேப்டன் டீன் எல்கர் 1 ரன் எடுத்து பும்ரா வேகத்தில் வெளியேற, கீகன் பீட்டர்சன் 15 ரன், எய்டன் மார்க்ரம் 13 ரன் எடுத்து ஷமி பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினர். வாண்டெர் டுஸன் 3 ரன்னில் ஆட்டமிழக்க, தென் ஆப்ரிக்கா 12.5 ஓவரில் 32 ரன்னுக்கு 4வது விக்கெட்டை பறிகொடுத்தது. இந்நிலையில், பவுமா - டிகாக் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்தது. டிகாக் 34 ரன் (63 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), முல்டர் 12, பவுமா 52 ரன் (103 பந்து, 10 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஓரளவுக்கு தாக்குப்பிடித்த மார்கோ 19, ரபாடா 25, மகராஜ் 12 ரன்னில் வெளியேற, தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 197 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (62.3 ஓவர்). இந்திய பந்துவீச்சில் ஷமி 16 ஓவரில் 5 மெய்டன் உள்பட 44 ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா, தாகூர் தலா 2, சிராஜ் 1 விக்கெட் எடுத்தனர். 7.2 ஓவர் மட்டுமே வீசிய நிலையில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ராவெளியேற நேரிட்டது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து, 130 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன் எடுத்துள்ளது. அகர்வால் 4 ரன் எடுத்து மார்கோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ராகுல் 5, ஷர்துல் 4 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Related Stories: