நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளை திட்டமிட்டு பாஜ சேதப்படுத்துகிறது: நிறுவன நாள் விழாவில் காங். தலைவர் சோனியா சாடல்

புதுடெல்லி:  நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மரபுகளை பாஜ திட்டமிட்டு சேதப்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் 137வது நிறுவன நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் நடந்த விழாவில் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா பேசியதாவது: ‘நாட்டின் வரலாறு பொய்யாக்கப்படுகின்றது. கங்கை-யமுனையின் கலாச்சாரத்தை அழிப்பதற்காக வெறுக்கத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு காங்கிரஸ் ஒருபோதும் மவுனமான பார்வையாளராக இருக்காது.

நாட்டின் வளமான பாரம்பரியத்தை அழிப்பதற்காக எவரையும் காங்கிரஸ் அனுமதிக்காது. தற்போது நமது சமூகத்தின் மதசார்பற்ற கட்டமைப்பை சூறையாட முயற்சிக்கின்றன. அவர்கள் வரலாற்றை மாற்றி எழுதுகிறார்கள். அவை உணர்ச்சிகளை தூண்டி, பயத்தை உண்டாக்கி, பகைமையை பரப்புகின்றன.

நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிகச்சிறந்த மரபுகள் திட்டமிட்டு சேதப்படுத்தப்படுகின்றன. நமது உறுதியான தீர்மானத்தின் மீது எந்த சந்தேகமும் வேண்டாம். நமது புகழ்பெற்ற பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நமது அடிப்படை நம்பிக்கைகளில் காங்கிரஸ் ஒருபோதும் சமரசம் செய்யாது. தேர்தலில் ஏற்றத்தாழ்வுகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் அனைத்து மக்களுக்கும் சேவை செய்வதற்கான நமது அர்ப்பணிப்பானது நிலையானது மற்றும் நீடித்தது. மக்கள் விரோத சக்திகளை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் அனைத்து தியாகங்களையும்  செய்யும்’.இவ்வாறு அவர் பேசினார்.

*கழன்று விழுந்த காங். கொடி

காங்கிரஸ் நிறுவன நாளையொட்டி கட்சி தலைமையகத்தில் மூத்த தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு இருந்தனர். இதனை தொடர்ந்து தலைவர் சோனியாகாந்தி கட்சி கொடியை ஏற்றினார். அப்போது எதிர்பாராதவிதமாக கொடி கழன்று அவரது கைகளில் விழுந்தது. இதனை சோனியா தாங்கி பிடித்துக்கொண்டார். கட்சி கொடி கழன்று விழுந்ததால் சோனியாகாந்தி அதிர்ச்சி அடைந்தார். அங்கிருந்த கட்சியின் பொருளாளர் பவன் பன்சால், பொது செயலாளர் வேணுகோபால் உள்ளிட்டோர் உடனடியாக அங்கு விரைந்தனர். கட்சியின் கொடி மீண்டும் கயிற்றில் இணைக்கப்பட்டு ஏற்றப்பட்டது. அங்கு இருந்த முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி மற்றும் தொண்டர்கள் இந்த சம்பவத்தினால் கவலை அடைந்தனர்.

Related Stories: