×

மதுரை கிளை மற்றும் சென்னை ஐகோர்ட்டில் திங்கள் முதல் நேரடி விசாரணை: பதிவாளர் ஜெனரல் அறிவிப்பு

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் செயல்பட்டு வந்த வீடியோ கான்பரன்ஸ் விசாரணை வரும் திங்கள்கிழமை முதல் நிறுத்தப்படுகிறது, என்றும் நேரடி விசாரணை தொடங்கப்படும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. பெரிய தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் என பெரும்பாலான நிறுவனங்களில் ஆன்லைன் மூலம் பணிகள் நடந்துவந்தது.

வக்கீல்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை தேடி சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இதனால், அவர்களால் வழக்கு விசாரணைக்கு ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும், தமிழகம் முழுவதும் உள்ள சார்பு நீதிமன்றங்களிலும் முக்கிய வழக்குகள் மட்டும் வீடியோ கான்பரன்சில் விசாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக அனைத்து நீதிமன்ற அறைகளிலும் வீடியோ கான்பரன்ஸ் வசதி செய்யப்பட்டது. வக்கீல்கள் தங்களின் வீடுகளில் இருந்தே வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்குகளில் ஆஜராகி வந்தனர்.

கொரோனா பரவல் இந்த ஆண்டு ஏப்ரல், மார்ச் மாதங்களில் குறையத்தொடங்கியதால் ஊரடங்கும் படிப்படியாக தளர்த்தப்பட்டது. இதையடுத்து, ஓரளவு சகஜநிலை திரும்பியது. இதனால், கடந்த 2 மாதங்களாக வீடியோ கான்பரன்ஸ் மற்றும் நேரடி விசாரணை என்ற கலப்பு விசாரணை முறை நீதிமன்றங்களில் கடைபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளதால் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வரும் திங்கட்கிழமை முதல் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை நிறுத்தப்படவுள்ளது என்றும், நேரடி விசாரணை மட்டுமே நடத்தப்படும் என்றும் உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பி.தனபால் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.

அதே நேரத்தில் கொரோனா கட்டுப்பாடுகளான சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்டவை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.கடந்த 21 மாதங்களாக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வீடியோ கான்பரன்ஸ் விசாரணை நிறுத்தப்பட்டு நேரடி விசாரணை தொடங்கப்படுவது வக்கீல்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திங்கட்கிழமை முதல் வீடியோ
கான்பரன்ஸ் விசாரணை நிறுத்தப்படும்.

Tags : Madurai ,Branch ,Chennai ,I Court ,Registrar General , Direct hearing in Madurai Branch and Chennai I Court from Monday: Registrar General's Notice
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...