×

உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் அருகே 4.6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது

உத்திரமேரூர்: உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் பதுக்கி வைத்திருந்த 4.6 டன் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை, போலீசார் கைது செய்தனர். ஒரு மினிலாரியை பறிமுதல் செய்தனர். மினிலாரியில் கடத்தி வந்த 50 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது, இது தொடர்பாக 2 பேர் கைது  செய்யப்பட்டனர். உத்திரமேரூர் அடுத்த சீத்தனஞ்சேரி பகுதியில் சாலவாக்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில், தலா 52 கிலோ எடை கொண்ட 50 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது.

இதுபற்றி லாரியில் இருந்த 2 பேரிடம் விசாரித்தபோது, காஞ்சிபுரத்தை சேர்ந்த முஜசிங் (28), வடிவேலு (29). காஞ்சிபுரத்துக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அரிசியுடன் மினி லாரியை பறிமுதல் செய்து, இருவரையும் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு, வழக்குப்பதிவு செய்து இருவரையும், போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், பிச்சிவாக்கம் ஊராட்சி, வெள்ளாளர் தெருயில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து, வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக, பெரும்புதூர் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெரும்புதூர் வட்ட வழங்கல் அலுவலர் இந்திராணி, தனி வருவாய் அலுவலர் புஷ்பராஜ் கொண்ட குழுவினர் பிச்சுவாக்கம் பகுதியில் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதிகாரிகளை கண்டதும், அங்கிருந்தவர்கள் தப்பிவிட்டனர்.

அப்போது, பிச்சுவாக்கம், வெள்ளாளர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, அங்கு பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், அதனை, குடிமை பொருள் குற்ற புலனாய்வு இன்ஸ்பெக்டர் சசிகலாவிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Utramerur ,Sriperumbudur , 4.6 tonnes of ration rice seized near Uttaramerur, Sriperumbudur: 2 youths arrested
× RELATED ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்