மெர்கன்டைல் வங்கி முன்னாள் தலைவரின் ரூ.293.91 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

சென்னை: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவராக நேசமணிமாறன் முத்து இருந்தார். இவர் தனது பதவி காலத்தில் கடந்த 2005-06 மற்றும் 2006-07ம் நிதியாண்டில் சிங்கப்பூரில் இரண்டு நிறுவனங்களில் அந்த நாட்டு பணத்தில் 5 கோடியே 29 லட்சத்து 86 ஆயிரத்து 250 டாலர் முதலீடு செய்துள்ளார். இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.293.91 கோடியாகும். வெளிநாடுகளில் பெரிய அளவில் முதலீடு செய்தால் ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி பெற வேண்டும்.

ஆனால் நேசமணிமாறன் முத்து ரிசர்வ் வங்கியிடம் எந்த வித முன் அனுமதி பெறாமலும், இந்திய கட்டுப்பாட்டாளர்களுக்கு தெரிவிக்காமலும் முதலீடு செய்துள்ளார்.

இதுகுறித்து அமலாக்கத்துறை அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம், 1999வது விதிகளின் கீழ் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் நேசமணிமாறன் முத்து மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இந்தியாவில் வசிக்கும் ஒருவர், சட்டத்திற்கு விரோதமாக ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி இல்லாமல் வெளிநாட்டில் சொத்துக்கள் அல்லது வெளிநாடுகளில் முதலீடு செய்தால் அந்த நபரின், வெளிநாட்டு முதலீடு செய்துள்ள சொத்துக்கு இணையாக இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது.

அதன்படி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் நேசமணிமாறன் முத்துவின் ரூ.293.91 கோடி சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இந்த சொத்துக்கள் தற்போது சதர்ன் அக்ரிபுரேன் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட், ஆனந்த் டிரான்ஸ்போர்ட் பிரவேட் லிமிடெட், எம்ஜிஎம் எண்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் எம்ஜிஎம் டைமண்ட் பீச் ரிசார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய 4 நிறுவனங்களில் பங்குகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இது தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: