×

திருவொற்றியூர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் பழுதடைந்த ‘ஈ’ பிளாக் கட்டிடத்தை இடிக்க முயன்றபோது வீடுகள் அதிர்வு: மண்ணியல் ஆய்வு வல்லுநர் குழுவினர் ஆய்வு

சென்னை: திருவொற்றியூரில் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் பழுதடைந்த ஈ பிளாக் கட்டிடத்தை இடிக்க முயன்றபோது, பக்கத்து வீடுகள் அதிர்ந்ததால் அப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதேப்போல், டி பிளாக் கட்டிடத்தை மண்ணியல் ஆய்வு வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்தபின் இடிக்கலாம் என அதிகாரிகள் கூறியதால் அதுவும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சென்னை திருவொற்றியூர் கிராம தெரு அரிவாக்குளம் பகுதியில் கடந்த 1993ம் ஆண்டு, அதிமுக ஆட்சி காலத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 14 பிளாக்குகள் கொண்ட 336 குடியிருப்புகள் கட்டப்பட்டது. இந்த ஒரு பிளாக்கில் மட்டும் 24 வீடுகள் உள்ளது.

இந்த குடியிருப்பில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், குடியிருப்பின் ‘டி’ பிளாக்கில் உள்ள 3 மாடி கட்டிடம் கடந்த ஞாயிற்றுகிழமை இரவு 8 மணிக்கு திடீரென அதிர்வு ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த குடியிருப்புவாசிகள், உடனடியாக காவல்துறைக்கும், குடிசைமாற்று வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். உடனே முன்னாள் திமுக கவுன்சிலர் தி.மு.தனியரசு விரைந்து வந்து பார்வையிட்டார். தகவலறிந்து திருவொற்றியூர் போலீசார், குடிசைமாற்று வாரிய அதிகாரிகளும் விரைந்தனர். குடியிருப்பில் உள்ள கட்டிடங்களில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

திமுக கவுன்சிலர் கட்டிடம் ஆபத்தாக உள்ளது  என, உடனடியாக அங்கிருந்த 200 பேரையும் கட்டாயப்படுத்தி  வெளியேற்றினார். கட்டிடத்திற்குள் யாரும் செல்லாதப்படி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து,  விரிசல் ஏற்பட்டிருந்த ‘டி’ பிளாக் கட்டிடம் யாரும் எதிர்பார்க்காத நிலையில் நேற்று முன்தினம் காலை, பயங்கர சத்தத்துடன் சரிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி புழுதி மண்டலமாக காட்சியளித்தது. இதனை தொடர்ந்து இந்த டி பிளாக் பக்கத்தில் உள்ள ‘ஈ’ பிளாக் குடியிருப்பு ஒருபுறமாக நேற்று சாய்ந்து ஆபத்தான நிலையில் இருந்தது.

உடனே நகர்ப்புற மேம்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இந்த குடியிருப்பையும் இடிக்க முடிவு செய்தனர்.இதனால் இங்கு வசித்த பொதுமக்கள், தங்களது வீடுகளில் உள்ள கட்டில், பீரோ, டிவி உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பான இடத்துக்கு தூக்கி வந்தனர். அப்போது, 3வது மாடியில் தங்கியிருந்த மூதாட்டி சாரதா (70) இறங்க முடியவில்லை. உடனே சில வாலிபர்கள் கட்டிலில் படுக்க வைத்து மூதாட்டியை மீட்டனர். இதைத்தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் 24 குடியிருப்புகள் கொண்ட ஈ பிளாக் குடியிருப்பை இடிக்கும் பணி தொடங்கியது. அப்போது பக்கத்து குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள், ‘எங்களது வீடுகளிலும் அதிர்வு ஏற்படுகிறது’ என்று கூச்சலிட்டனர். இதையடுத்து, ஈ பிளாக் குடியிருப்புகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதற்கு முன்னதாக, ஏற்கனவே இடிந்து விழுந்த டி பிளாக் குடியிருப்புகளின் இடிபாடுகளை அகற்ற பொக்லைன் இயந்திரங்களுடன் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படை வீரர்களும் வந்தனர். அப்போது, இடிபாடுகளில் சிக்கிய பீரோ, கட்டில், டிவி மற்றும் மாணவர்களின் புத்தகங்கள், சான்றிதழ்கள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் உள்ளிட்ட தங்களது பொருட்கள் கிடைக்குமா என்ற ஆவலில் பொதுமக்கள் திரண்டனர். இடிபாடுகளை அகற்றும் பணி தொடங்கியபோது, 6 சிலிண்டர்களை தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஒருவேளை அவைகள் வெடித்திருந்தால் மிக பெரிய ஆபத்து நிகழ்ந்திருக்கும். நல்லவேளையாக எதுவும் நடக்கவில்லை என்று பொதுமக்கள் கூறினர்.

தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணி தொடங்கியபோது, மண்ணியல் நிபுணர்கள் ஆய்வுக்கு பின் அகற்றும் பணியை தெடரலாம் என்று அதிகாரிகள் முடிவேடுத்து அப்புறப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த ஞாயிற்றுகிழமை இரவு விரிசல் ஏற்பட்டதும் முன்னாள் திமுக கவுன்சிலர் தி.மு.தனியரசு எங்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றினார். அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால் பலர் இறந்திருப்பார்கள். தற்போது, உடமைகளைதான் இழந்து நிர்கதியாக நிற்கிறோம். இதை சம்பாதித்து கொள்ளலாம். ஆனால் உயிர் போகாமல், எப்படியோ தனியரசுவால் நாங்கள் உயிர் பிழைத்துள்ளோம். அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். தற்போது, எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கே.பி சங்கர் எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இதன் இடையே, நேற்று காலையில் கே.பி.சங்கர் எம்எல்ஏ, 300 குடும்பங்களுக்கு சிற்றுண்டி, அரிசி, ரூ.500 ரொக்கம் வழங்கினார். இதை தவிர, தமிழக முதல்வரும் எங்களுக்கு உதவி செய்துள்ளார். அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்’ என்றனர். இதனை தொடர்ந்து, திருவொற்றியூர்  அரிவாக்குளத்தில் இடிந்து விழுந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் அண்ணா பல்கலைக்கழக மண்ணியல் ஆய்வு வல்லுநர் குழுவினர் ஆய்வு நடத்தினர்.
இதில், பேராசிரியை முத்தாரம் தலைமையில்,  நான்கு பேர் கொண்ட ஆய்வுக் குழுவினர் குடியிருப்பு வளாகத்தில் மணலின் தரம்,  இடிந்து விழுந்த கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட  மணல் குறித்து ஆய்வு நடத்தினர்.

மேலும், பாதியாக இடிந்து விழுந்த  ‘டி’ பிளாக்கின் எஞ்சிய பகுதியை மாடியில் நடந்து சென்று ஆய்வு செய்து மணல் மாதிரியை எடுத்துச் சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து பேராசிரியர் ஜெயா தலைமையிலான கட்டடவியல் வல்லுநர் குழுவினர் இங்கு உள்ள அனைத்து கட்டுமானங்களையும் அகற்ற வேண்டுமா, கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களில் குறைபாடு உள்ளதா, கட்டுமானங்களை தாங்குவதற்கான மணற்பாங்கு இப்பகுதியில் இருக்கிறதா குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தேமுதிக ஆறுதல்:  தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்டிடம் இடிபட்ட பகுதிக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி அரிசி, பாய், ஸ்டவ் மற்றும் உணவு போன்ற நிவாரண பொருட்களையும் வழங்கினார்.

Tags : Tiruvottiyur ,Board , Vibration of houses while attempting to demolish the dilapidated ‘E’ block building at Tiruvottiyur Housing Board flat: Geological Survey Team Study
× RELATED முதல்வர் குடும்பம் குறித்து அவதூறு...