×

21 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை பெற கைரேகை கட்டாயம் இல்லை: அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை: பொங்கல் பண்டிகைக்காக அரசால் வழங்கப்பட உள்ள 21 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை பெற கைரேகை கட்டாயம் இல்லை என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார். சென்னை தரமணியில் உள்ள  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் கிடங்கில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று தர ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பொங்கல் பண்டிகைக்கான 21 அத்தியாவசிய பொருள்கள் கொண்ட தொகுப்பானது 2 கோடியே 15 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது. 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை பெறுவதற்காக கைரேகை கட்டாயம் இல்லை. குடும்ப அட்டையில் உள்ள நபர்கள் யார் வேண்டுமானாலும் நியாயவிலை கடையில் வந்து பெற்றுச் செல்லலாம். அதே நேரத்தில் வழக்கமான பொருட்களை பெறுவதற்கு கைரேகை கட்டாயம்.

இந்த பரிசு பொருட்கள் அனைத்தும் ஜனவரி 2ம் தேதிக்குள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள நியாயவிலை கடைகளுக்கு சென்றடைந்து விடும் எனவும் ஜனவரி 3ம் தேதி அல்லது 4ம் தேதி முதல் பொங்கல் பரிசு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு பணம் வழங்குவது தொடர்பாக முதல்வர் தான் அறிவிப்பார். தமிழகத்தில் 500 கலைஞர் உணவகம் தொடங்குவது தொடர்பாக ஒன்றிய அரசுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எளியவர்களின் பசியை போக்கும் வகையில் உணவகம் தொடங்க மாநில அரசு, இடம் வழங்கும். உணவகத்திற்கு தேவையான அனைத்து செலவுகளையும் ஒன்றிய அரசு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Pongal ,Minister ,Chakrabarty , No fingerprinting required to get Pongal package containing 21 essentials: Minister Chakrabarty informed
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா