தீவிர பக்தரான அன்னமய்யா நடந்து வந்த வழியில் பாத யாத்திரையாக வந்து ஏழுமலையானை தரிசித்த 10 ஆயிரம் பக்தர்கள்: டிக்கெட் இன்றி அதிகாரிகள் அனுமதி

திருமலை: ஏழுமலையானின் தீவிர பக்தரான அன்னமய்யா நடந்து வந்த வழியில் பாத யாத்திரையாக வந்த 10 ஆயிரம் பக்தர்கள் எவ்வித டிக்கெட்டும் இன்றி சுவாமியை தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவலை தடுக்க ஆன்லைனில் ரூ300 மற்றும் இலவச தரிசன டிக்கெட், கல்யாண உற்சவம், விஐபி சிபாரிசு கடிதம் மூலம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இவ்வாறு தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் பெய்த கனமழையால் மலைப்பாதை சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் தவிர்க்க 3வது மலைப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக  ஏழுமலையானின் தீவிர பக்தரான அன்னமய்யா, கடப்பாவில் இருந்து பாத யாத்திரையாக வந்து ஏழுமலையானை தரிசித்த பாதையான ‘அன்னமய்யா மார்க்கத்தை’ 3வது மலைப்பாதையாக அமைக்க அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி தலைமையிலான குழு முடிவு செய்தது. இதனை வரவேற்கும் விதமாக கடந்த வாரம் கடப்பா மாவட்ட ஜில்லா பரிஷத் தலைவர் அமர்நாத் தலைமையில் ஆயிரம் பேர் அன்னமய்யா பாதை வழியாக திருமலைக்கு வந்தனர்.

இந்நிலையில் கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கடப்பாவில் இருந்து அன்னமய்யா மார்க்கம் வழியாக திருமலைக்கு நேற்று பாதயாத்திரையாக வந்தனர். அவர்கள் யாரிடமும் தரிசன டிக்கெட்டுகள் இல்லை. இதையறிந்த அதிகாரிகள், அனைவரையும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர். இதுகுறித்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் கூறுகையில், ஏழுமலையான் கோயிலுக்கு வரும் அன்னமய்யா மார்க்கத்தை மலைப்பாதை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கடப்பா மாவட்ட மக்கள் கேட்டுக்கொண்ட நிலையில் தற்போது அறங்காவலர் குழு எங்களது கோரிக்கையை ஏற்றுள்ளது.

இது எங்களுக்கு மட்டுமின்றி, அவ்வழியாக வரும் மற்ற மாவட்ட மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மலைப்பாதை அமைக்கும் பணியை உடனடியாக தேவஸ்தானம் தொடங்கவேண்டும். என்றனர். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கூறிவரும் தேவஸ்தானம், முதல்வரின் சொந்த மாவட்டத்தில் இருந்து வந்த 10 ஆயிரம் பேருக்கு எவ்வித டிக்கெட்டும் இல்லாமல் உடனடி தரிசனம் செய்து வைத்ததாக மற்ற பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: