×

இணைய வழியில் தமிழ் கற்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு: தமிழ்நாடு அரசு

சென்னை: இணைய வழியில் தமிழ் கற்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. தமிழ் இணையக் கல்விக்கழகம் என்பது தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இணைய வழியில் உலகெங்கிலும் உள்ளவர்களுக்குத் தமிழ் கற்பித்தலே தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் முதன்மையான நோக்கமாகும். மேலும், தமிழ் இலக்கியம், கலை, கலாச்சாரம் போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கும் இணைய வழியில் தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான விவரங்களை தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கி வருகிறது.

தமிழ் கற்றல்-கற்பித்தலை ஆற்றுப்படுத்தும் வகையில், தமிழ் மொழியைக் கற்க விரும்பும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் மாணவர்களுக்கு இணைய வழியிலும், நேரடியாகவும் கற்பிக்க ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். மேற்படி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆங்கில வழியிலும், பிற மொழிகள் வாயிலாகவும் தமிழ் மொழியைக் கற்பிக்கும் திறன் வாய்ந்தவராக இருத்தல் வேண்டும். இப்பணியில் ஈடுபட விருப்பமுள்ள ஆசிரியர்கள், தகுதியான இளைஞர்களின் விவரங்கள் பெறப்பட்டு, தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணைய தளத்தில் பட்டியல் வெளியிடப்படும்.

அப்பட்டியலிலுள்ள தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் / இளைஞர்களைக் கொண்டு தமிழ் இணையக் கல்விக்கழகம் வழியாகவோ அல்லது உலகளவில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் வாயிலாகவோ இணைய வழியில் கற்பித்தல் சேவைகள் வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் தங்களின் விவரங்களைத் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணைய தளத்தில் (www.tamilvu.org/eteach_reg/) உள்ள படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, மேற்படி இணையதளத்தில் 10-01-2022க்குள் உள்ளீடு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கற்பிக்கும் வகுப்புகளின் கால அளவிற்கேற்ப மதிப்பூதியம் நிர்ணயம் செய்யப்படும்.

Tags : Government of Tamil Nadu , Applications are welcome to teach Tamil online
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...