திருமணமாகாமல் கர்ப்பம்; பிரசவித்த குழந்தையை காட்டிலேயே விட்டுச்சென்ற கல்லூரி மாணவி: பெரம்பலூரில் பரபரப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவரது தந்தை தாயை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் தாய் மகளுடன் ஊட்டிக்கு சென்று அங்குள்ள தனியார் டீ எஸ்டேட்டில் வேலை செய்து வருகிறார். அங்குள்ள கல்லூரியில் மகள் பிஏ 3ம் ஆண்டு படித்துக்கொண்டு, பகுதி நேரமாக தன் தாயுடன் எஸ்டேட்டில் வேலை பார்த்து வருகிறார்.

 அதே எஸ்டேட்டில் வேலை பார்க்கும் எசனை கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் ராஜதுரை(22) என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதில் அவர் கர்ப்பமடைந்தார்.

தை வெளியில் சொல்லவில்லை. நாளடைவில், வயிறு பெரிதாவதை கண்டு சந்தேகமடைந்து, தாய் கேட்டுள்ளார். அப்போதும் அந்த பெண் கர்ப்பமாக இருப்பதை மறைத்து விட்டார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன், கல்வி உதவி தொகை பெற அரசு அதிகாரிகளிடம் கையெழுத்து வாங்க சொந்த ஊரான எசனை கிராமத்திற்கு தாயும், மகளும் வந்தனர். நேற்று இரவு 9 மணியளவில் மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவர் தன் தாயிடம் இயற்கை உபாதை கழிப்பதற்கு செல்வதாக கூறிவிட்டு, அருகில் உள்ள காட்டு பகுதிக்குள் சென்றார்.

அங்கு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. நீண்ட நேரம் ஆகியும் காட்டிற்கு சென்ற மகள் வராததால், தாய் காட்டிற்குள் சென்று பார்த்தார். அங்கு மாணவி குழந்தையுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது மாணவிக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால், குழந்தையை அங்கேயே வைத்து விட்டு மகளை தாய், பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாணவிக்கு சில மணி நேரத்திற்கு முன்தான் குழந்தை பிறந்திருக்கும் என்பதை அறிந்து கொண்டு, சந்தேகத்தின் பேரில் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார், மாணவியிடம் விசாரணை நடத்தினார். இதில் நடந்த விவரங்கள் தெரியவந்தது. இதையடுத்து இன்று அதிகாலை 2 மணியளவில் போலீசார் மாணவியை அழைத்துக்கொண்டு எசனை காட்டுப்பகுதிக்கு சென்றனர். அங்கு அழுது கொண்டிருந்த குழந்தையை மீட்டு, சிகிச்சைக்காக பெரம்பலூர் ஜிஹெச்சில் சேர்த்தனர். மருத்துவமனையில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: