×

மண்டல பூஜை காலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில் வருவாய் ரூ.78.92 கோடி

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை முடிந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகளுடன் நடை சாத்தப்பட்டது. மகரவிளக்கு விழாவுக்காக கோயில் நடை மீண்டும் டிசம்பர் 30-ம் தேதி திறக்கப்படவுள்ளது. தரிசனத்துக்காக பக்தர்கள் டிசம்பர் 31-ம் தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 14-ம் தேதி மகர விளக்கு ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. சபரிமலை கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கே.அனந்தகோபன் கூறுகையில்:

மண்டல பூஜை காலத்தில் நவம்பர் 15-ம் தேதி முதல் டிசம்பர் 25-ம் தேதி வரை சபரிமலை கோயிலுக்கு ரூ.78.92 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 10.35 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் வருகை குறைந்ததால் கோயிலுக்கு ரூ.8 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. 2019-ல் கோயிலின் வருமானம் ரூ.156 கோடியாக இருந்தது என்று கூறியுள்ளார்.

தேவசம் வாரிய அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் கூறுகையில், மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை வரும் பக்தர்களுக்காக எருமேலியில் இருந்து பம்பை செல்லும் பாரம்பரியமான காட்டுப்பாதை திறந்துவிடப்படும். டிசம்பர் 31-ம் தேதி முதல் பக்தர்கள் இந்தப் பாதையில் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜையின் போது பக்தர்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்யுமாறு, மாநில அரசுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இங்கு பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கொரோனா பரவலையொட்டி சபரிமலையில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சபரிமலைக்கு செல்லும் பெரிய பாதையில் அமைந்துள்ள நீலி மலை - அப்பாச்சி மேடு வழித்தடத்தில் போதிய மருத்துவ வசதி செய்து தர வேண்டும் என கோவிலின் சிறப்பு கமிஷனர் தெரிவித்தார். இதன் அடிப்படையில், கேரள உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

மண்டல மகர விளக்கின் போது, சபரிமலையில் பக்தர்களுக்கு போதிய மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். அவசர சிகிச்சை மற்றும் இதயவியல் சிகிச்சை மையங்களில் சேவை குறைபாடு ஏற்பட்டால், அதை சிறப்பு கமிஷனர் நீதிமன்ற கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Sabarimala Iyappan ,Mandala Puja , sabarimala
× RELATED நிறை புத்தரிசி பூஜைக்கு சபரிமலை...