×

திருவண்ணாமலை கோவிலில் இயற்கை வேளாண்மை: கோவில் ஏரியை பலப்படுத்தியதால் தொடர்மழையில் பாதிப்பு இல்லை!!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தேவையான அரிசியை கோவில் நிலத்திலேயே இயற்கை வேளாண் முறையில் உற்பத்தி செய்து தன்னிறைவு பெறப்பட்டிருக்கிறது. கோவில் ஊழியர்களின் இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். பொற்குணம் அடுத்த தனக்கோடிபுரத்தில் கோவிலுக்கு சொந்தமாக 447 ஏக்கரில் விளை நிலங்கள் உள்ளன. தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள அவற்றில் 32 ஏக்கர் நிலத்தில் கோவில் பணியாளர்களே கடந்த 2 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர். 3 திறந்தவெளி கிணறுகள், 3 ஆழ்துளை கிணறுகள், பெரிய ஏரி ஆகியவற்றை உள்ளடக்கிய விளைநிலங்களில் 3 போகத்திற்கு பொன்னி நெல் மற்றும் கோ- 51 ரக நெல் சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர்.

பல ஆண்டுகளாக கோவில் நிலங்களில் அறுவடை செய்யப்படும் நெல்லை தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்திற்கு நிர்வாகம் விற்பனை செய்து வந்தது. அதன் மூலம் பெறப்பட்ட பணத்திலேயே சுவாமிக்கு செய்யப்படும் நைவேத்தியம், பக்தர்களுக்கு அன்றாடம் வழங்கப்படும் அன்னதானம், பிரசாதம் ஆகியவற்றை தயார் செய்வதற்காக வெளியிலிருந்து அரிசி வாங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கோவில் தேவைக்காக சுமார் 60, 000 கிலோ அரிசியும் கோவில் நிலத்தில் இருந்தே உற்பத்தி செய்யப்பட்டதால் கிலோ 55 ரூபாய்க்கு வாங்கப்பட்டு வந்த நிலை தவிர்க்கப்பட்டு உள்ளது. கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் கோசாலையிலுள்ள பசுக்களுக்கு தாங்கள் உற்பத்தி செய்யும் நெல்லிலிருந்து பெறப்படும் உமி, வைக்கோலை உணவாக வழங்குகின்றனர்.பசுக்களின் சானத்தையே உரமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு சுழற்சி முறையில் இயற்கை வேளாண்மையை மேற்கொண்டு வருவதால் பசுக்களுக்கான செலவு முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. இயற்கை வேளாண்முறையை பயன்படுத்துவதால் செயற்கை உரங்களுக்கான செலவும், அதனால் விளையும் தீங்கும் முற்றிலுமாக தவிர்க்கப்படுகிறது. கோவில் நிலத்திலுள்ள ஏரியில் ஆயிரக்கணக்கான பனை விதைகள், தென்னை, பாதாம், தேக்கு ஆகியவற்றை நட்டு கடந்த ஆண்டு வலுப்படுத்தப்பட்டது. இதனால் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் சேதமடைந்தாலும், 32 ஏக்கர் உட்பட 400 ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளசேதத்திற்கு உள்ளாகாமல் செழிப்புடன் அறுவடைக்கு தயாராக உள்ளது. அண்மையில் செழிப்புடன் விளங்கும் விளைநிலங்களை பார்வையிட்ட அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பணியாளர்களின் உன்னத முயற்சியை வெகுவாக பாராட்டினார்.           


Tags : Thiruvannamalai temple , Thiruvannamalai, temple, nature farming, lake, continuous rain
× RELATED திருவண்ணாமலை சென்ற சென்னை பக்தர் திடீர் மரணம்