பிரதமர் மோடி பாதுகாப்புக்கு ரூ.12 கோடி கார் : ஏகே - 47 வகை துப்பாக்கியால் சுட்டாலும் வெடிகுண்டு தாக்குதலிலும் தப்பிக்கும் வசதி!!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடிக்காக ரூ.12 கோடியில் குண்டு துளைக்க முடியாத கவச வாகனம் போன்ற புதிய கார் வழங்கப்பட்டுள்ளது.மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள மேபாக் எஸ் 650 என்ற மாடல் கார், பிரதமர் மோடியின் வாகன வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது.ஏற்கனவே பிரதமர் மோடி பயன்படுத்தும் ரேஞ்ச் ரோவர் லாக், டொயோட்டா லேண்ட் குருய்சர் காருடன் 3வதாக மெர்சிடிஸ் கார் சேர்க்கப்பட்டுள்ளது. அண்மையில் ரஷிய அதிபர் புதின் டெல்லி வந்து இருந்த போது மோடி மேபாக் எஸ் 650 மாடல் காரில் தான் ஐதராபாத் மாளிகைக்கு சென்றார்.இதையடுத்து பிரதமர் மோடியின் வாகன வரிசையில் மெர்சிடிஸ் எஸ் 650 கார் காணப்பட்டது.

ஏகே - 47 வகை துப்பாக்கியால் சுட்டாலும் குண்டு துளைக்காத அளவுக்கு வலுவாக தயாரிக்கப்பட்டுள்ளது மேபாக் எஸ் 650 கார்.மேபாக் எஸ் 650 மாடல் காரின் ஜன்னல் கண்ணாடிகளில் பாலிகார்பனேட் பூசப்பட்டுள்ளதால் அதையும் துப்பாக்கி குண்டு துளைக்க முடியாது. காரில் இருந்து 2 மீ அருகே 15 கிலோ டிஎன்டி வெடி பொருள் வெடித்தாலும் மெர்சிடிஸ் எஸ் 650 காருக்கு சேதம் ஏற்படாது.விஷவாயுத் தாக்குதல் நடந்தாலும் பயணிகள் பாதிக்கப்படாத வகையில் காரின் உள்ளே சுத்தமான காற்று கிடைக்க வசதி அமைக்கப்பட்டுள்ளது.எரிபொருள் டேங்கில் குண்டு மூலம் துவாரம் ஏற்பட்டால் உடனே அடைத்துக் கொள்ளக்கூடிய பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது.இருக்கைகள் உட்பட மெர்சிடிஸ் மேபாக் எஸ் 650 காரின்  உள்புறம் முழுவதும் ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.பிரதமருக்காக காரில் பல மாற்றம் செய்யப்பட்டதால் அதன் விலை ரூ.12 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இதனிடையே பிரதமர் மோடி பயன்பாட்டிற்காக மெர்சிடிஸ் மேபாக் எஸ் 650 கார்கள் 2 வாங்கப்பட்டு உள்ளன.மோடி எந்த காரில் பயணம் செய்கிறார் என்பதை கண்டுபிடிக்காமல் இருக்க 2 கார்களுமே வாகன வரிசையில் இடம்பெறும்.

Related Stories: