லூதியானா நீதிமன்ற குண்டுவெடிப்பு சம்பவம்!: எஸ்.எஃப்.ஜெ அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஜெர்மனியில் கைது..!!

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்ற குண்டுவெடிப்பு நிகழ்வு தொடர்பாக எஸ்.எஃப்.ஜெ அமைப்பை சேர்ந்தவர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார். லூதியானா கிழமை நீதிமன்றத்தின் இரண்டாவது தலத்தில் உள்ள பதிவரையில் கடந்த 23ம் தேதி பிற்பகல் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பில் குளியலறையின் சுவர்கள் இடிந்து விழுந்ததுடன், ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின. இதனிடையே குண்டுவெடிப்பில் பலியானவர்கள் லூதியானாவை சேர்ந்த ககன்தீப் சிங் என்றும் தலைமை காவலராக இருந்த அவர், போதைப்பொருள் வழக்கு தொடர்பாக 2019ம் ஆண்டில் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், சில தீவிரவாத அமைப்புகளுடன் அவர் தொடர்பில் இருந்ததாகவும், அவரது உடலை அவரது குடும்பத்தினர் அடையாளம் கண்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

மேலும் நீதிமன்றத்தில் வெடித்து சிதறிய வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் தீவிரவாதிகள் பயன்படுத்தும் வகையை சேர்ந்தவை என்றும் எல்லைக்கு அப்பால் இருந்து அந்த வெடிபொருட்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதன் பின்னணியில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு இருப்பதும் அம்பலமானது. இந்நிலையில், லூதியானா நீதிமன்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக எஸ்.எஃப்.ஜெ அமைப்பை சேர்ந்த ஐஸ்விந்தர் சிங் முல்தானி என்பவர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து இந்திய புலனாய்வு அதிகாரிகள் ஜெர்மனி விரைந்துள்ளனர். பஞ்சாபில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமைதியை சீர்குலைக்கும் வகையில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த ஹர்விந்தர்சிங் சந்து என்ற தேடப்படும் குற்றவாளியுடன் சேர்ந்த இவன் திட்டமிட்டிருந்தது உளவுத்துறை விசாரணையில் ஏற்கனவே தெரியவந்திருக்கிறது.

Related Stories: