×

3 பேர் பலி எதிரொலி வரதமாநதி அணை பகுதியில் போலீஸ் தீவிர கண்காணிப்பு

பழநி: பழநி அருகே வரதமாநதி அணையில் மூழ்கி 3 பேர் பலியானதன் எதிரொலியாக போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பழநி- கொடைக்கானல் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் வரதமாநதி அணை உள்ளது.  பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களும், கொடைக்கானல் செல்லும் சுற்றுலா  பயணிகளும் இந்த அணைக்கு செல்வது வழக்கம். தொடர் மழையின் காரணமாக 67 அடி  உயரமுள்ள வரதமாநதி அணை நிரம்பி வழிகிறது. இதனால் அணையை காண வரும்  பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அணைக்குள்  இறங்கவோ, குளிக்கவோ கூடாதென எச்சரிக்கை பலகைகள் ஆங்காங்கே  வைக்கப்பட்டுள்ளது.

எனினும், சிலர் தண்ணீருக்குள் இறங்குகின்றனர்.  இந்நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிக்குள் செல்பி எடுக்க முயன்ற  சென்னையை சேர்ந்த 3 இளைஞர்கள் நேற்று முன்தினம் அணையில் மூழ்கி  உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து  திண்டுக்கல் எஸ்பி சீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில், டிஎஸ்பி சத்யராஜ்  உத்தரவின்படி அணையின் நீருக்குள் இறங்க முடியாதபடி வரதமாநதி அணை பகுதியில்  போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.    

அணையை பார்வையிட  வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள், பொதுமக்கள் நீருக்குள் இறங்கா வண்ணம்  கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல் பழநி கோயிலுக்கு வரும் ஐயப்ப  பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் போக்குவரத்தை  ஒழுங்குபடுத்தவும், குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும் பழநி  மலைக்கோயில், சுற்றுலா பஸ் நிலையங்கள், கிரிவீதி, அய்யம்புள்ளி சாலைகளில்  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசாரின் இந்நடவடிக்கை  பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



Tags : Bali Echoli Varthamanathi Dam , 3 killed in Echo Varathamanadhi Dam area Intensive police surveillance
× RELATED மேம்பால பணி காரணமாக தியாகராயர் நகரில் போக்குவரத்து மாற்றம்