பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி: முன்னாள் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவிப்பு!!!

டெல்லி: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனி கட்சி தொடங்கியுள்ள முன்னாள் பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறார். பஞ்சாப் மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு வரை முதலமைச்சராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இடையே பனிப்போர் வெடித்தது. காங்கிரஸ் தலைமை சித்துவிற்கு ஆதரவாக செய்லபடுவதாக குற்றம்சாட்டி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய அமரீந்தர் சிங் பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

பஞ்சாப் 2022 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு இருக்கும் நிலையில் நேற்று டெல்லி சென்ற கேப்டன் அமரீந்தர் சிங் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது பஞ்சாப் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைப்பதற்காக அமரீந்தர் சிங் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். டெல்லியில் பஞ்சாப் மாநில பாஜக பொறுப்பாளர் கஜேந்திர சிங் ஷகாவத்தை சந்தித்து பேசிய பிறகு, இந்த அறிவிப்பை அமரீந்தர் சிங் வெளியிட்டிருக்கிறார்.

தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க உள்ளதாக கூறிய அமரீந்தர், தங்கள் கூட்டணியே பஞ்சாபில் அடுத்து ஆட்சியமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சுக்தேவ் சிங் திந்த்சாவின் சன்யூத் கட்சியும் இந்த கூட்டணியில் இடம்பெறும் என தெரிகிறது. கடந்த முறை பஞ்சாப் சட்டமன்ற தேர்தலை பாஜக அகாலிதளத்துடன் கூட்டணியமைத்து எதிர்கொண்டது. ஆனால் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியிலிருந்து அகாலிதளம் வெளியேறிவிட்டது. இந்த நிலையில் தற்போது உருவாகியுள்ள பாஜக- அமரீந்தர் சிங் கூட்டணி பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.           

Related Stories: