×

குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க 3 நாட்கள் தடை: ஒமிக்ரான் தொற்று பரவலால் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

தென்காசி: குற்றால அருவிகளில் டிசம்பர் 31 முதல் ஜனவரி 2ம் தேதி வரை பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்படுவதாக தென்காசி ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். குற்றால பேரருவி, பழைய குற்றாலம், ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும்.

அந்த காலகட்டத்தில் குற்றாலத்தில் சீசன் ரம்யமாக காணப்படும். அதுமட்டுமின்றி மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளியை உருக்கியது போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதனால் அருவிகளில் நீராட சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படும். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக 8 மாதங்களுக்கு பிறகு கடந்த 20ம் தேதி குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் நீராட தென்காசி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.

இதனிடையே கொரோனா நோய் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டி குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் வரும் 31ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு அருவிகளில் நீராட பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே, சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.


Tags : District Administration , குற்றால அருவி,பொதுமக்கள்,ஒமிக்ரான்,மாவட்ட நிர்வாகம்
× RELATED ஊட்டி மகளிர் தின விழாவில் நடனமாடிய கலெக்டர், டிஆர்ஓ