×

ஒமிக்ரான் இருப்பதை கண்டறிய இரட்டை ஆர்டிபிசிஆர் சோதனை

டெல்லி: மரபணு சோதனைக்கு முன்பாக இருமுறை ஆர்டிபிசிஆர் சோதனை நடத்தும்படி மாநில அரசுகளை மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய நாடு முழுவதும் ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்பதை மரபணு சோதனை மூலமாகவே உறுதி செய்ய முடியும். இந்த பரிசோதனைக்கான செலவு 5000 ரூபாய் வரை ஆகிறது. இந்நிலையில் கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்படும் போது அதில் தொற்று இருப்பது உறுதியானால் ஒமிக்ரான் பாதிப்பு இருப்பதை கணடறிய மரபணு வரிசை முறை கொண்ட இறக்குமதி ஆர்டிபிசிஆர் கருவியில் இரண்டாவது முறையாக அப்பரிசோதனை நடத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதிலும் தொற்று இருப்பது உறுதியானால் நேரடியாக மரபணு சோதனை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரட்டை ஆர்டிபிசிஆர் சோதனைக்கான செலவு வெறும் 250 ரூபாயில் முடிந்துவிடும் என்பதால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பை அறிய ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்தவர்களுக்கு விரைவாக முடிவுகளை வழங்க வேண்டும் என்றும், தாமதமாகும் முடிவுகள் பாதிப்புகளை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. சென்னையில் ஒருநாளில் 30 ஆயிரம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிகபட்சமாக சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒருநாளைக்கு சுமார் 10 ஆயிரம் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. 8 ஆயிரம் மாதிரிகள் சோதிக்கப்படுகின்றன. தவிர சென்னையில் உள்ள அனைத்து நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், இ.எஸ்.ஐ மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள நோயாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு 6 முதல்12 மணி நேரத்திற்குள் முடிவுகள் கிடைத்துவிடுகின்றன. ஆனால் பொதுமக்களுக்கோ 2-3 நாட்கள் ஆகிறது.

Tags : omicron
× RELATED பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை...