×

ராஜேந்திரபாலாஜி பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவினில் பல கோடி ரூபாய் முறைகேடு: மதுரையில் விஜிலென்ஸ் அதிரடி விசாரணை

மதுரை: அதிமுக ஆட்சிக்காலத்தில் மதுரை ஆவினில் கடந்த 2019 முதல் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. ஊழியர்கள் தேர்வு, பால், நெய், வெண்ணெய் உற்பத்தியிலும்,  ஆவணங்களில் திருத்தம், பில்கள் மோசடி, நூதன தரக்கட்டுப்பாடு மோசடி என பல குற்றச்சாட்டுகள் குறித்து ஆவினுக்கு புகார்கள் சென்றது. இதில், குறிப்பாக திருப்பதி லட்டு தயாரிக்கும் பணிக்கு 15 ஆயிரம் கிலோ நெய் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.10 கோடி. ஆனால் தணிக்கையில் இத்தகவல் இடம் பெறவில்லை. திருப்பதி கோயில் பெயரில் அனுப்பப்பட்ட நெய், வெளி மார்க்கெட்டில் கொள்ளை லாபத்திற்கு விற்கப்பட்டதாகவும், அதுபோல் சென்னை ஆவினுக்கு மதுரையில் இருந்து 6 டன் வெண்ணெய் அனுப்பப்பட்டு, அது சென்னை சென்று சேரவில்லை எனவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

பல தனியார்களுக்கு நெய் விற்பனை செய்ததாக ரூ.3 கோடி வரை இன்வாய்ஸ்கள் கொடுக்கப்பட்டு அவை மறுநாள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதாவது முதல் நாளில் நெய் ஆர்டர் செய்து வெளியே கொண்டு செல்லப்படுகிறது. மறுநாள் அந்த ஆர்டர் ரத்து செய்யப்படுகிறது. ஆனால் நெய்யை, ஆவினுக்கு திரும்ப ஒப்படைக்காமல் மொத்த இருப்பில் போலி கணக்குகள் மூலம் சரி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அப்போதைய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது புகார் கூறப்பட்டது. தற்போது அவர் ரூ.3 கோடி மோசடி புகாரில் தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில், மதுரை ஆவினில் நடந்த முறைகேடு தொடர்பாக, சென்னை ஆவின் விஜிலென்ஸ் டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான இரண்டு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள், மதுரை ஆவினில் 2019 முதல் நடந்த பணி நியமனங்கள், பொருட்கள் கொள்முதல், தற்காலிக பணி நியமனங்களில் நடந்த முறைகேடுகள், ஆவினுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்ட புகார்கள் குறித்து ஆவின் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவணங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags : Rajendrapalaji ,Dairy ,Minister ,Avin ,Madurai , When Rajendrapalaji was the Dairy Minister, crores of rupees were misappropriated in Avin: Vigilance action in Madurai
× RELATED பாஜக மிகப்பெரிய ஊழலில் சிக்கியுள்ளதை...