×

மாறுபட்ட வைரஸ் சவாலாக இருப்பதால் ஒமிக்ரான் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கடிதம்

புதுடெல்லி: ஒமிக்ரான் வைரஸ் சவாலாக இருப்பதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஒன்றிய அரசு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘டெல்டா வகை வைரஸை விட மூன்று மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது ஒமிக்ரான் ஆகும். கொரோனா தடுப்பு பணிக்கும் இது பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் அதன் பரவல் விகிதம் தீவிரமாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவை பொருத்தமட்டில் 19 மாநிலங்களில் 578 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகத்தில் 116 நாடுகளில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அதிக பாதிப்பு இருக்கிறது. இதில் இந்தியா எந்த சூழலையும் சமாளிக்கும் வகையில் தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக மாநிலங்கள் தங்கள் பகுதியில் உள்ள சுகாதார நிலையங்களின் மருத்துவ கட்டமைப்புகளை பலப்படுத்த வேண்டும். ஆக்சிஜன் மற்றும் தேவையான மருந்துகளை கையிருப்பு வைத்து கொள்ள வேண்டும். உள்ளூர் மட்டத்தில் மக்கள் அதிகம் கூடுவதை தடை விதிக்கலாம்.

குறிப்பாக பண்டிகைகளின் போது மக்கள் கூடுவதை தவிர்க்க உள்ளூர் மட்டத்திலான கட்டுப்பாடுகளை அதிகரிக்க அறிவுத்தப்பட்டுள்ளது. டெஸ்ட்-டிராக்-டிரீட்மெண்ட் எனும் முறையை கடைப்பிடிக்க வேண்டும். பரவலை ஆரம்ப கட்டத்திலே கட்டுப்படுத்த மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். சமூக பரவலை தடுக்கும் வகையில் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கொரோனா மாறுபாடான ஒமிக்ரான் சவாலாக இருக்கும் என்பதால் கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் வரும் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் தேவைப்பட்டால் இரவு நேர ஊடரங்குகளை அமல்படுத்திக் கொள்ளலாம்’ என வலியுறுத்தியுள்ளார்.

*பூஸ்டருக்கு எந்த டோஸ்? ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ‘வரும் ஜனவரி 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. முதல் இரண்டு தவணை தடுப்பூசிகள் எந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதோ அதே தடுப்பூசிகளை தான் பூஸ்டர்களாக செலுத்திக்கொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*ஜனவரி 1 முதல் முன்பதிவு 15-18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும் முன்களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறையை ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டது.

*15-18 வயது சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படும்.

*இதற்கான முன்பதிவு வரும் ஜனவரி 1ம் தேதி தொடங்குகிறது. தகுதிவாய்ந்த சிறுவர்கள் கோவின் ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம்.

*முன்பதிவு செய்ய ஆதார் எண் அல்லது 10ம் வகுப்பு பள்ளி அடையாள அட்டையை சான்றாக வழங்கலாம்.

* பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்பவர்களும் கோவின் ஆப்பில் பதிவு செய்யலாம். ஜனவரி 10ம் முதல் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

*60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மருத்துவர்களின் பரிந்துரைப்படியே பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.

*இவர்கள் 2 டோஸ் செலுத்திக் கொண்ட பிறகு, 9 மாதங்கள் அதாவது 39 வாரங்கள் பூர்த்தியான பிறகே பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும்.

Tags : U.S. government , Omigron should tighten restrictions as a different virus challenge: U.S. government letter to states
× RELATED அமெரிக்க அரசு செலவினங்களுக்கான நிதி...