×

திருநின்றவூர் - திருமங்கலம் வரை மெட்ரோ ரயில் இயங்க வேண்டும்: ஆவடி சி.பி.எம் மாநாட்டில் தீர்மானம்

ஆவடி: திருநின்றவூர் முதல் திருமங்கலம் வரை மெட்ரோ ரயில் இயங்கிட வேண்டும் என ஆவடியில் நடந்த வட சென்னை மாவட்ட சி.பி.எம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடசென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநாடு ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2 நாட்கள் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே.மகேந்திரன் தலைமை தாங்கினார்.  முன்னதாக வரவேற்புக்குழு தலைவர் மா.பூபாலன் வரவேற்றார். கட்சிக்கொடியை மூத்த நிர்வாகி ஆர்.ராஜன் ஏற்றினார். மாநாட்டை துவக்கி வைத்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வைத்து பேசினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: இந்தியா முழுவதும் சுமார் 12 கோடி பேர் வரை வேலை வாய்ப்பு பெற்றுள்ள சிறு, குறுந்தொழில்களின் நிலை வீழ்ச்சியின் விளிம்பில் தற்போது நிற்கிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 7.5 லட்சம் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் மூலம் 38 லட்சம் பேர் வரை வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். மொத்த தொழில் உற்பத்தியில் 45சதவீதமும், ஏற்றுமதியில் 48 சதவீதமும்,வேலைவாய்ப்பில் 40 சதவீதமும் தந்திடும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையை ஒன்றிய, மாநில அரசுகள் பாதுகாத்திடவும், அண்ணா நூற்றாண்டு நூலகம் போல, வடசென்னையில் நூலகம் மற்றும் கலையரங்கம் அமைக்கவும், மெட்ரோ ரயில் சேவையை வட சென்னை முழுவதும் இணைக்கும் வகையில் அமைக்கவும்,  திருநின்றவூரில் இருந்து திருமங்கலம் வரை மெட்ரோ ரயில் இயக்கவும் ,கும்மிடிப்பூண்டி வரை புறநகர் ரயில்களுக்கென்று தனிப் பாதையை உருவாக்கி கூடுதலாக ரயில்கள் இயக்கிடவும், நகர்ப்புற ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு 200 நாள் வேலை உத்தரவாதத்தை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அரசு உருவாக்கவும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் வங்கி கணக்கில் ஓராண்டு முழுவதற்கும் மாதம் ₹7500 வீதம் செலுத்தவேண்டும்.

மேலும், இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய குடியிருப்புகளுக்கு பதிலாக எந்த கட்டணமும் வசூலிக்காமல் புதிய குடியிருப்புகளை கட்டித்தரவும், வடசென்னையில் பக்கிங்காம், கேப்டன், ஓட்டேரி நல்லா கால்வாய் உள்ளிட்ட கால்வாய்கள்,  ஆறுகளில், நீர்வழித் தடங்களில்  கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மாநாட்டில், மேற்கண்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், மாவட்ட செயலாளர் எல்.சுந்தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஆவடி பகுதி செயலாளர் ஏ.ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thiruninravur ,Thirumangalam ,Metro Rail ,Avadi ,CPM Conference , Thiruninravur - Thirumangalam Metro Rail to run: Resolution at the Avadi CPM Conference
× RELATED மதுரை திருமங்கலம் அருகே விபத்தில் 4 பேர் பலி