வரதராஜ பெருமாள் கோயிலில் கருவறையில் சுவாமி முன்பு படம் எடுத்து கொண்ட ஒன்றிய அமைச்சர்: வைரலாகும் படத்தால் சர்ச்சை

சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கருவறையில் சுவாமியுடன் ஒன்றிய இணை அமைச்சர்  புகைப்படம் எடுத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன், கோயில்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய ஒன்றிய வெளியுறவு மற்றும் கலை கலாச்சார துறை இணையமைச்சர் மீனாட்சி லோகி வந்தார். அப்போது அவர், வைகுண்ட பெருமாள், கைலாசநாதர், வரதராஜ பெருமாள் உள்பட பல கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், அங்குள்ள பழமையான சிற்பங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிலையில் ஒன்றிய இணையமைச்சர் மீனாட்சி லோகி, சின்ன காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கருவறைக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தார். கழுத்தில் ஆளுயர மாலையுடன், கருவறையிலுள்ள மூலவர்  வரதராஜப்பெருமாள் சுவாமி தெரியும்படி, செயல் அலுவலர் தியாகராஜன், பட்டாச்சாரியார்களுடன்  நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். சுவாமியுடன் ஒன்றிய இணை அமைச்சர் மீனாட்சி லோகி எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  கோயில் கருவறையில் விதிமுறைகளையும்,மரபுகளையும், மீறிய செயல் அலுவலர், பட்டாச்சாரியார்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: