×

திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: 24 வீடுகள் தரைமட்டம்; 100க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர்

சென்னை: திருவொற்றியூரில் குடிசைமாற்று வாரியத்துக்கு சொந்தமான 3 மாடி கொண்ட குடியிருப்பு ஒன்று, நேற்று காலை 11 மணிக்கு திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதில் இருந்த 24 வீடுகளும் தரைமட்டமாயின. நல்வாய்ப்பாக 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்று தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் தீவிரமான மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை திருவொற்றியூர் கிராம தெரு அரிவாக்குளம் பகுதியில் கடந்த 1993ம் ஆண்டு, அதிமுக ஆட்சி காலத்தில் குடிசைமாற்று வாரியம் சார்பில் 14 பிளாக்குகள் கொண்ட 336 குடியிருப்புகள் கட்டப்பட்டது.

ஒரு பிளாக்கில் 24 வீடுகள் உள்ளது. இந்த குடியிருப்பில் தற்போது பெற்றோர், சிறுவர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதனால் அப்பகுதி எப்போதும் பரபரப்பாகவும், நெரிசலுடனும் காணப்படும். அதிமுக ஆட்சி காலத்தில் இந்த குடியிருப்புகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதுகுறித்து பல முறை குடியிருப்பு வாசிகள் குடிசைமாற்று வாரிய அதிகாரிகளுக்கும் அதிமுக அமைச்சர்களிடமும் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் குடியிருப்பின் ‘டி’பிளாக்கில் உள்ள 3 மாடி கட்டிடத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு திடீரென அதிர்வு ஏற்பட்டது. இதனால் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது என்ற அச்சத்தில் குடியிருப்பில் இருந்து 24 குடும்பத்தினர் தங்களது குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தூக்கி கொண்டு அவசர அவசரமாக வெளியேறினர்.

பிறகு குடியிருப்பில் உள்ள கட்டிடங்களில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் கட்டிடத்திற்குள் செல்ல அஞ்சினர். இதுகுறித்து பொதுமக்கள் திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்போது அந்த கட்டிடம் பொதுமக்கள் வசிப்பதற்கு உகந்தது இல்லை என தெரியவந்தது. உடனே போலீசார், இச்சம்பவம் குறித்து குடிசைமாற்று வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கட்டிடத்திற்குள் சென்று அதன் உறுதி தன்மையை ஆய்வு செய்தனர்.

அதில் கட்டிடம் அபாயகரமாக இருந்ததை உணர்ந்த அதிகாரிகள், இந்த கட்டிடத்திற்குள் யாரும் செல்ல வேண்டாம் என்று கூறி அனைவரையும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொண்டனர். கட்டிடத்திற்குள் யாரும் செல்லாதப்படி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. குடியிருப்பு கட்டிடம் எப்போது வேண்டுமானாலும், இடிந்து விழும் என்பதால் அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் கட்டிடத்திற்குள் செல்லாமல் வெளியே கடும் பனியிலும், கடும் குளிரிலும் தங்கினர். நேற்று காலை குடியிருப்பில் உள்ள சிலர் மட்டும் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை மட்டும் எடுத்தனர்.

பலர் எங்களது உடமைகள் மற்றும் நகை, பணம் வீட்டிற்குள் இருப்பதாக கூறி செல்ல முயன்றனர். ஆனால் அதிகாரிகள் கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் உள்ளே சென்றால் உயிரிழப்பு ஏற்படும் என்று கூறி பொதுமக்கள் யாரையும் கட்டிடத்திற்குள் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் விரிசல் ஏற்பட்டிருந்த ‘டி’பிளாக் கட்டிடம் யாரும் எதிர்பார்க்காத நிலையில் நேற்று காலை 11 மணிக்கு பயங்கர சத்தத்துடன் சீட்டு கட்டுகள் போல் சரிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதி புழுதி மண்டலமாக காட்சியளித்தது. கட்டிடத்தின் அருகில் நின்று இருந்த பொதுமக்கள் மீது கட்டிடத்தின் இடிபாடுகள் விழுந்ததில் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் 100க்கும் மேற்பட்ட மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

யாரும் எதிர்பார்க்காத நிலையில் இந்த கட்டிடம் இடிந்து விழுந்ததால் தடையை மீறி கட்டிடத்தில் உள்ள வீட்டில் உள்ள பொருட்கள் எடுக்க யாரேனும் உள்ளே சென்று இருக்கலாம் என்று அச்சம் நிலவுகிறது. எனவே அந்த குடியிருப்பில் வசித்து வந்த 24 குடும்பத்தில் உள்ள அனைவரையும் அதிகாரிகள் கணக்கெடுத்தனர். கட்டிடம் இடிந்த சம்பவம் கேட்டு தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து வந்து கட்டிடத்திற்குள் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்று இடிபாடுகளை இயந்திரங்களை கொண்டு அகற்றி வருகின்றனர். குடியிருப்பில் உள்ள மீதமுள்ள 13 பிளாக்குகளின் கட்டிடங்கள் உறுதி தன்மை குறித்தும் குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் அருகில் உள்ள கட்டிடங்களில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பு கருதி அதிகாரிகள் கட்டிடத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இடிந்த கட்டிடத்தை பார்வையிட்டார். மேலும், இடிபாடுகளில் யாரேனும் உள்ளார்களா என்று ஆய்வு செய்ய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்களை கேட்டுக்கொண்டார். அதன்படி பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 100 பேர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், காவலர் மீட்பு குழுவினர் முழு வீச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கட்டிடத்தில் வசித்து வந்த 24 குடும்பத்தை சேர்ந்த நபர்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி வழங்கப்பட்டு அனைவரையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். தற்போது வரை இடிந்த கட்டிடத்தில் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் இயந்திரங்கள் உதவியுடன் மீட்பு குழுவினர் தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்த திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏ கே.பி.சங்கர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சென்று பார்வையிட்டார். வீடுகளை இழந்த பொதுமக்களுக்கும் அவர் ஆறுதல் கூறினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

* வீடுகள் இழந்த குடும்பத்தினருக்கு மாற்று வீடுகள், தலா ரூ.1 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திருவொற்றியூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் 1993ல் கட்டப்பட்ட பழைய குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 24 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்து, அதனால் மக்கள் பாதிப்படைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிவாரண பணிகளை மேற்பார்வையிட அனுப்பி வைத்து, விபத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு உடனடியாக மாற்று குடியிருப்புகள் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன். பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்பில் இருந்து மீண்டு புதிய வாழ்க்கையை துவங்க 24 குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் பழைய குடியிருப்புகளின் விபரங்களை சேகரிக்கவும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* குளத்தின் மீது அடுக்குமாடி கட்டிடம்
தற்போது அடுக்குமாடி குடியிருப்பு உள்ள இடத்தில் ஏற்கனவே அருவா என்ற குளம் இருந்தது. இந்த இடத்தில் 93ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்ட திட்டமிட்டபோது, இது கட்டுமானத்திற்கு உகந்த இடம் அல்ல என்று பல சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும், அந்த எதிர்ப்பையும் மீறி இந்த இடத்தில் தரம் இல்லாமல் குடியிருப்பு கட்டியதால் மிக விரைவில் பழுதாகி தற்போது இடிந்து விழுந்துள்ளது என்று பொதுமக்கள் வேதனையோடு தெரிவித்தனர்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய  குடியிருப்பு இடிந்த விழுந்த விவகாரத்தில் அதே பகுதியில் உள்ள மற்ற வீடுகளும் ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறி உள்ளார். தமிழக முதல்வர் அறிவித்தபடி பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிதி ரொக்கம் உதவியை நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை மாவட்ட கலெக்டர் விஜயராணி, கலாநிதி வீராசாமி எம்பி, எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர் ஆகியோர் வழங்கினர். மேலும் தொகுதியின் சார்பில் கே.பி. சங்கர் எம்எல்ஏ தலா 25 கிலோ, அரிசி, பாய், பாத்திரங்கள் போன்ற அத்தியாவசிய  பொருட்களை வழங்கினார்.

Tags : Tiruvottiyur Cottage Replacement Board , 3 storey building collapsed at Tiruvottiyur Cottage Replacement Board flat: 24 houses ground level; More than 100 survived
× RELATED திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய...