அன்னை தெரசா மிசினரியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்?: ஒன்றிய அரசு மீது குற்றம்சாட்டும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி..!!

டெல்லி: அன்னை தெரசா மிசினரி சேவை நிறுவனத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் ஒன்றிய அரசு முடக்கியதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து மம்தா பானர்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி இன் இந்தியா என்ற சேவை நிறுவனத்தின் அனைத்து வங்கி கணக்குகளும் ஒன்றிய அரசால் முடக்கப்பட்டிருக்கிறது. அதுவும், கிறிஸ்துமஸ் தினத்தன்று, ஒன்றிய அரசு இந்தியாவில் உள்ள அன்னை தெரசா மிசினரியின் வங்கிக் கணக்குகளை முடக்கியிருப்பது தனக்கு பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கையால் அந்நிறுவனத்தை நம்பி இருக்கும் 22 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு உணவும், மருந்தும் இன்றி கிடைக்காத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் தான் என்றாலும், மனிதாபிமான முயற்சிகளை சமரசம் செய்யக்கூடாது என்றும் மம்தா தெரிவித்துள்ளார். அன்னை தெரசா மிசினரி சேவை நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது சம்பந்தமாக பெரிய அளவிலான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் இந்த ட்விட்டர் பதிவு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

Related Stories: