×

இமாச்சலில் ரூ.11,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்!: ரூ.28,000 கோடி முதலீடுகளை ஈர்க்கும் மாநாட்டையும் தொடங்கி வைத்தார்..!!

மண்டி: இமாச்சலப்பிரதேசம் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இமாச்சலப்பிரதேசத்தின் மண்டி நகருக்கு சென்ற பிரதமர், இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைத்தார். சுமார் 28,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நீர் மின் திட்டம், இமாச்சல், உத்திரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், உத்திராகண்ட், டெல்லி ஆகிய 6 மாநிலங்களை இணைக்கும் ரேணுகாஜி அணை திட்டம், தவுலா சித் நீர்மின் உற்பத்தி திட்டம் ஆகியவற்றுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, கொரோனாவால் நாடு நெருக்கடியான சூழலில் தவித்த போது மாநிலங்களுக்கும், பிற நாடுகளுக்கும் தேவையான மருந்துகளை வழங்கியது இமாச்சலப் பிரதேசம் தான் என்றும் அந்த அளவுக்கு மருந்துகள் தயாரிப்பில் முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது என்றும் தெரிவித்தார். இமாச்சல பிரதேச அரசு நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதன் ஆட்சிக் காலத்தில், அரசாங்கம் கொரோனாக்கு எதிராகப் போராடியதுடன், மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் நிறுத்தப்படாமல் பார்த்துக் கொண்டது என பேசினார். ஒரு மாநிலத்திற்கு இரண்டு வகையான வளர்ச்சி மாதிரிகள் இருக்கிறது.

ஒன்று, அனைவருக்குமான அரசு, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவர் மீதான நம்பிக்கை என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டது. மற்றொன்று சுயநல அரசு, குடும்ப நல அரசு என்ற கொள்கையை கொண்டது. இமாச்சல பிரதேசத்தில் முதல் கொள்கையின் அடிப்படையில் நிறைய வளர்ச்சி திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது என்றார்.  இமாச்சலப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் அங்கு பல்வேறு நலத்திட்டங்களை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : Modi ,Himachal , Himachal, Rs 11,000 crore project, Prime Minister Modi
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...