×

திருவொற்றியூரில் இடிந்த குடியிருப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று மாலைக்குள் நிவாரண உதவி வழங்கப்படும்: அமைச்சர் தா.மோ அன்பரசன் பேட்டி

சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் இன்று (27.12.2021 ) திருவொற்றியூர் கிராமத்தெருவில் உள்ள அரிவாக்குளம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் 24 வீடுகள் இடிந்து விழுந்ததை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், அரிவாக்குளம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 24 வீடுகள் இன்றயை தினம் இடிந்து விழுந்துள்ளது. இக்குடியிருப்புகள் 1993 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடங்கள் ஆகும். இவை, தட்ப வெப்ப சூழ்நிலையின் காரணமாக சிதிலமடைந்து விழுந்துள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் பயனாளிகளே தேர்வு செய்யப்படாமல் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டது. சிதிலமைடைந்த பழைய குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய குடியிருப்புகள் கட்ட கடந்த ஆட்சியாளர்கள் எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சென்னையில் மட்டும் 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடியிருப்புகளில் 23000 வீடுகள் வாழ்வதற்கே தகுதியில்லாத நிலையில் உள்ளது என கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் சிதிலமடைந்த 23000 வீடுகளை படிப்படியாக அகற்றிவிட்டு, அதில் வாழும் மக்களுக்கு புதிய குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தாய் உள்ளத்தோடு நமது முதலமைச்சர் இந்த நிதி ஆண்டிற்கு மட்டும் (2021 - 2022) 7500 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு ரூபாய் 2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதனடிப்படையில் சிதிலமடைந்த குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகள் துவக்கப்பட்டு உள்ளது.

இன்றைய தினம் இடிந்து விழுந்த 24 வீடுகளில் குடியிருந்தோரின் பாதிப்பை போக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் தலா ரூபாய் 1 இலட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இன்று மாலைக்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும். அது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று குடியிருப்பினை தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் விரைவில் மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, வீடுகளை இழந்த குடியிருப்புதாரர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பின் அருகாமையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை ஆய்வு செய்ய தொழில்நுட்ப வல்லுநர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு இன்றயை தினம் அருகாமையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை ஆய்வு செய்ய உள்ளது. அதன் பின்னர் அக்குழுவின் அறிக்கையின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அருகாமையில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கும் மாற்று இடம் தரவேண்டும் என குழு பரிந்துரைத்தால் அவர்களுக்கும் மாற்று இடம் வழங்கப்படும்.

இப்பகுதியில் சிதிலமடைந்த குடியிருப்புகளை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூபாய் 1.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை புனரமைக்க ரூபாய் 125 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். சென்னையில் வரும் 5 ஆண்டுகளுக்குள் சிதிலமடைந்த அனைத்து வீடுகளும் இடிக்கப்பட்டு புதிய குடியிருப்புகள் கட்டி தரப்படும் என மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். சுதர்சனம் மற்றும் கே.பி. சங்கர், பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ், பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல துணை ஆணையர் (வடக்கு) எம்.சிவகுரு பிராபகரன், வாரிய தலைமை பொறியாளர் இராம சேதுபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thiruvotiyur ,Minister ,Mo Anfreassan , tha.mo.anbarasan
× RELATED வண்ணாரப்பேட்டையில் மரச்சாமான்கள்...